டெல்லி: காட்சிப்படுத்தக் கூடாத வன விலங்குகளின் பட்டியலில் இருந்து காளை நீக்கப்படாத போதும் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் (ரேக்ளா ரேஸ்) நடத்துவதற்கு அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையில் முக்கிய அம்சங்களில் ஜல்லிக்கட்டும் ஒன்று. தமிழகத்தின் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் சர்வதேச அளவில் பார்வையாளர்களை கவரக் கூடியவை.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஜல்லிகட்டு நிகழ்ச்சியில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக பிராணிகள் நல ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கினர். இதற்காக நீதிமன்றத்துக்கும் போய் தடை வாங்கினர். இதனைத் தொடர்ந்து கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், காட்சிப்படுத்தக் கூடாத வன விலங்குகள் பட்டியலில் ‘காளையும்’ சேர்க்கப்பட்டது.
அதாவது வனவிலங்குகளான கரடிகள், குரங்குகள், புலிகள், சிறுத்தைகள், சிங்கங்கள் ஆகியவற்றைப் போல வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடையான “காளை’களையும் காட்சிபடுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இதனால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதற்கு சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் தமிழக அரசு சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றி இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது உரிய நிபந்தனைகளை பின்பற்றவில்லை எனக் கூறி இதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு இந்த தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து தமிழகத்தில் இருந்து குரல் எழுப்பப்பட்டது. இதற்காக அனைத்து கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் குரல் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் நேற்றைய தேதியிட்டு ஒரு அறிவிக்கையை (Notification) வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் அதாவது கரடி, குரங்கு, புலி, சிறுத்தை, சிங்கம் ஆகியவற்றுடன் வீட்டில் வளர்க்கப்படும் காளையும் நீடிக்கிறது. அதே நேரத்தில் பாரம்பரியமாக, கலாசார ரீதியாக காளைகளைக் கொண்டு ஜல்லிகட்டு மற்றும் மாட்டுவண்டி பந்தயம் (ரேக்ளா ரேஸ்) ஆகியவற்றை நிபந்தனைகளுடன் நடத்தலாம்.
ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டுவண்டி பந்தயங்கள் பாரம்பரியமாக நடைபெறும் இடங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட மாஜிஸ்திரேட் அனுமதியுடன் நடத்தலாம்
-மாட்டு வண்டி பந்தயமானது 2 கி.மீ. தொலைவுக்கு அதிகமாக நடத்த கூடாது.
-ஜல்லிக்கட்டு காளைகளை வாடிவாசலில் இருந்து 15 மீட்டர் சுற்றளவுக்குள்ள பகுதியில்தான் பிடிக்க வேண்டும்.
-போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும்.
-ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயங்களை விலங்குகள் நலவாரியத்தினர் கண்காணிக்க வேண்டும்.
-இவ்வாறு மத்திய அரசின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.