அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. வெளிநாட்டினர் பெரும் ஆர்வம்.. விறுவிறுப்பான முன்பதிவு

jallikattuமதுரை: ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போனது மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர். இங்கு வருடா வருடம் நடைபெறும் பொங்கல் ஜல்லிக்கட்டு விழாவுக்கு பெரும் திரளான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனதால் பெரும் சோகத்துடன் காணப்பட்ட அலங்காநல்லூர் தற்போது படு பரபரப்பாக காணப்படுகிறது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. மக்கள் படு உற்சாகமாக உள்ளனர். அதை விட மாடுபிடி வீரர்கள்தான் கால் பூமியில் பாவாத அளவுக்கு உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறவிருப்பதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஜல்லிக்கட்டைக் காண ஆர்வம் காட்டுகின்றனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது என்பதால் இங்கு வருடா வருடம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவார்கள். தமிழக அரசின் சுற்றுலாத்துறையே இவர்களை அழைத்து வரும்.

இந்த ஆண்டும் ஏகப்பட்ட வெளிநாட்டினர் ஜல்லிக்கட்டுக்கு வர முன்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை ஜெர்மனி, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு நடைபெறப் போகும் தகவல் வந்ததைத் தொடர்ந்து மதுரை சுற்றுலா வளர்ச்சி அலுவலகம் பிசியாகி விட்டது. முன்பதிவுக்காக வெளிநாட்டினர் இங்கு வந்தவண்ணம் உள்ளனராம்.

தற்போது ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காளைகளைத் தயார்படுத்தும் பணிகள் வேகம் பிடித்துள்ளன. மாடுபிடி வீரர்களும் காளை அடக்கும் பயிற்சிகளில் குதித்துள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: