முல்லை பெரியாறு அணையில் கேரள போலீஸ் பாதுகாப்புக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு

mullai_periyar_damதேனி: முல்லை பெரியாறு அணையில் கேரள கமாண்டோ போலீஸ் பாதுகாப்பில் ஈடுபடுவதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். முல்லைப் பெரியாறு அணையில் நாளை முதல் ஒரு டி.எஸ்.பி., 2 இன்ஸ்பெக்டர்கள், 85 போலீசார் அடங்கிய கேரள சிறப்பு கமாண்டோ போலீஸ் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என கேரள ஏ.டி.ஜி.பி. பத்மகுமார் தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. தற்போது இதற்கு விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அணை மீட்புக்குழுத் தலைவர் ரஞ்சித்குமார் கூறும்போது,

பெரியாறு அணையின் பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த தமிழக விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அணைக்கு கேரள சிறப்பு கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள ஏ.டி.ஜி.பி. கூறி உள்ளது இருமாநில மக்களிடையே நல்லுறவை பாதிக்கும் வகையில் உள்ளது.

இது பேபி அணையை பராமரிக்கும் உரிமத்தை நம்மிடமிருந்து பறிக்க நடக்கும் சூழ்ச்சி என்றார். போராட்டக் குழுவினைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜ்மோகன் கூறும்போது, முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடம் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியாகும். மத்திய அரசு மற்றும் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் சரணாலயப் பகுதிக்குள் குடியிருப்பு வீடுகளோ, மற்றும் வேறு எந்த உள் கட்டமைப்பு வசதிகளும் செய்ய அனுமதி இல்லை. வனப்பாதுகாப்புச் சட்டங்களை மீறி சரணாலயத்திற்குள் போலீஸ் பாதுகாப்புப் போட முயற்சி மேற்கொள்ளுவது சட்டத்தை அவமதிக்கும் செயலாகும் என்றார்.

tamil.oneindia.com

TAGS: