தமிழக கலைத்துறைக்கு கிடைத்த கவுரவம்

temple_nyt_001உலக அளவில் பார்க்க வேண்டிய சிறந்த 52 இடங்களில் தமிழகத்திற்கு 24வது இடத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அளித்துள்ளது.

தமிழர்களுடைய கலைத்திறமைக்கும் பரந்த மனதிற்கும் மதிப்பளிக்க சில சந்தர்ப்பங்களில் இந்தியா தவறினாலும், உலக அரங்கில் மதிப்பளிக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு கிடைத்த பெரிய கவுரவமே.

அமெரிக்காவின் முதன்மை பத்திரிகையான ’நியூயார்க் டைம்ஸ்’ 2016 புத்தாண்டு பிறப்பை ஒட்டி, உலகில் இந்த வருடத்தில் சுற்றிப்பார்க்க தகுதியான மிகச்சிறந்த 52 இடங்களை தேர்வுசெய்து வெளியிட்டுள்ளது. அதில் 24 வது இடத்தில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாட்டை தேர்வுசெய்ய காரணமாக இருந்தது, இங்கு உள்ள பண்பாட்டை வளர்க்கும் கலாசாரம் மற்றும் கட்டட அமைப்புகளில் உள்ள கலை நுட்பமும் தானாம்.

இந்தியாவில் தமிழ்நாடு மட்டும் சிறந்த காரணங்களுக்காக தேர்வாகியிருப்பது இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மத்தியிலும் பெருமைக்குரிய விஷயமே.

தமிழக கோயில்கள் இதற்கு முக்கிய காரணம், தஞ்சை பெரியகோவில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், மலை கோயில்கள், மாமல்லபுரம், செட்டிநாடு பகுதியில் உள்ள 18ம் நூற்றாண்டின் கட்டடங்கள் குறிப்பிடத்தக்கவை.

மெட்ரோ நகரங்கள் வெவ்வேறு காரணங்களுக்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

அதில் அழகுக்கு மெக்ஸிகோ, கனடாவின் பெரிய நகரமான டொராண்டோ, ஹோட்டல் பிரம்மாண்டங்களுக்காக துபாய், விதவிதமான உணவுவகையில் சிறந்த துருக்கியின் செஸ்மே, இக்காலத்தவரும் வியக்கும் சீனாவின் பழமை நகரான ஹாங்சூ என ஒரு தேர்வு வரிசை நீள்கிறது.

இந்தியாவின் கலாசாரம், பண்பாட்டை உலக நாடுகள் பாராட்டவே செய்கிறது.

இந்திய அளவில் அவர்கள் மொத்தமாக பாராட்டினாலும் அந்த பாராட்டுக்குரிய விஷயங்களில் தமிழகம் மற்றும் தென்னிந்தியாவில் கடைப்பிடிக்கிற விஷயங்களே மிகுதியானதாக உள்ளன.

மேற்குலக நாடுகளில், பலரும் பல்வேறு காரணங்களுக்காக மணமுறிவு செய்துகொண்டு, புதியவர்களோடு வாழ்வை தொடர்கிறார்கள்.

இவர்கள், கடைசிவரை ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் தமிழர்களின் வாழ்க்கை முறை, குடும்ப அமைப்புகளில் உள்ள சிறப்பை எண்ணி ஏங்குகிறார்கள்.

உடல் நலம் குறைந்தவர்கள், வறுமை சூழ்ந்தவர்கள் கைவிடப்பட்டால், கடைசிவரை வாழ்க்கைத் துணை பாதுகாப்பற்ற பரிதாபம்தான்.

அதை அனுபவித்த பெரும்பாலான பெண்கள் இந்திய கலாசாரமே சிறப்பு என்கிறார்கள்.

கணவன் மனைவியாக, தாய் தந்தையாக, தாத்தா பாட்டியாக ஒரு முழுவாழ்வு கடந்த நிலையில் அந்த ஜோடிக்குள் ஏற்படும் ஆன்ம நெருக்கம் ஒரு பிறவி பேரின்பம்.

அதற்குள் காதல், ஊடல், புரிதல், சகித்தல், கசத்தல், விட்டுக்கொடுத்தல் என எத்தனை படிக்கட்டுகள் கடக்கப்பட்டிருக்கிறது.

அது மேற்குலக நாடுகளை சேர்ந்தவர்களுக்கு நன்கு விளங்கியிருப்பதில் வியப்பில்லை.

ஹிந்தி, சமஸ்கிருதம்தான் இந்தியாவின் கலாசார அடையாளங்களாக வெளிநாடுகளில் காட்டப்படுகிறது.

மத்திய அரசு அதுபோல தமிழுக்கும் வாய்ப்பளிக்குமானால், திருக்குறளால் இந்தியாவுக்கு நிச்சயம் உலக அளவிலான பெருமை சேரும்.

எல்லா காலத்திற்கும் ஏற்புடைய சமதர்ம சமூக வாழ்வியல் சிந்தனை வெளிப்பாடான திருக்குறள் போல ஒரு நூல், இந்தியாவின் எந்த மொழியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க் டைம்ஸ் இந்தியாவை ஆராய்ந்த இந்த தேர்வுக்காக பெருமைகொள்ளும் உணர்ச்சியைவிட, நன்றி சொல்லும் உணர்ச்சியே தமிழர்களுக்கு மேலானது.

-மருசரவணன்.

-http://www.newindianews.com

TAGS: