பதான்கோட் தாக்குதல்: தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது… பாக்.கிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

pathankot456வாஷிங்டன்: பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு சாதகமாக செயல்படக் கூடாது என பாகிஸ்தானிற்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமானப் படை தளத்தில் கடந்த வாரம் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின் போது 7 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது.

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகள், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள். எனவே அந்த இயக்கம் மற்றும் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை இந்தியா அறிவுறுத்தியது. இது தொடர்பாக அந்த இயக்கத்தின் தலைவர் மசூத் அசார், அவரது சகோதரர் அப்துல் ரவுப் அஸ்கர் உள்பட 4 தீவிரவாதிகள் தொடர்பான சில ஆதாரங்களும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானிற்கு அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கண்டனத்தைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தகவல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் உள்ள விபரங்கள் குறித்து செய்திக்குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில், ‘பதான்கோட் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு சாதகமாக செயல்படக் கூடாது. ஏற்கனவே அளித்த வாக்குறுதிபடி விரைவாக நடவடிக்கை எடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி நேற்று தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசினார். பதான்கோட் தாக்குதலின் பின்னணி என்ன? என்ற உண்மையை கண்டறிந்து, குற்றவாளிகளை நீதியின்முன் நிறுத்துமாறு நவாஸ் ஷெரிப்பை ஜான் கெர்ரி கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த நவாஸ் ஷெரிப், இதுதொடர்பான விசாரணை விரைவாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். உண்மையை நாங்கள் நிச்சயமாக வெளிகொண்டு வருவோம். அப்போது எங்கள் நாட்டு அரசின் சாமர்த்தியத்தையும், நேர்மையையும் இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது என்று அவர் தெரிவித்தார்’ என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களே, பதன்கோட் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது என்பது தொடர்பான இந்திய உளவுத்துறை தகவல்கள் வழங்கப்பட்டதை அடுத்து ஜான் கெர்ரி, நவாஸ் செரீப்பிடம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே வரும் 15ம் தேதி இஸ்லாமாபாத்தில் இந்திய- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பதான்கோட் தாக்குதலினால் ஏற்பட்ட பரபரப்பால், இந்தப் பேச்சுவார்த்தையில் ஏதும் இடையூறு ஏற்படாது என இருநாட்டு அதிகாரிகளும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: