இறைச்சிக்கு குறிவைத்து முடக்கப்படுகிறதா ஜல்லிக்கட்டு?

கடந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாததால் 80 ஆயிரம் காளைகள் விற்கப்பட்டதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மாட்டிறைச்சி சந்தையை குறி வைத்தே ஜல்லிக்கட்டு தடை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தத் தடையால் நாட்டு மாடுகள் அடியோடு அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

ஏர் பூட்டி நடத்தப்படும் விவசாயம் முற்றிலுமாகக் கைவிடப்பட்டு, டிராக்டர் மூலம் உழுகிற விவசாயத்துக்குக் காளை மாடுகள் பயன்படுத்தப்படுவது இல்லாமல் ஆகிவிட்டது. அதேபோல காளை மாட்டு வண்டிகளும் அடியோடு மறைந்துவிட்டன.

இந்த நிலையில், இன விருத்திக்காக மட்டுமே ஜல்லிக்கட்டு காளைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை அழிக்கப்பட்டால், இன விருத்திக்கான காளைகளுக்கு நாம் ஐரோப்பிய நாடுகளை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில், மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இவை தவிர, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு வட மாவட்டங்களில் எருதுவிடுதல் என்னும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இப்போட்டிகளுக்கு முழுக்க, முழுக்க உள்ளூர் காளை மாடுகளே பயன்படுத்தப்படுகின்றன. போட்டிகளுக்காக அந்த மாடுகள் கன்று பருவத்திலிருந்தே தயார் செய்யப்படுகின்றன.

இப்போது ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், ஜல்லிக்கட்டு மாடுகள் மட்டுமின்றி, அந்த நோக்கத்துக்காக தயாராகும் ஆயிரக்கணக்கான மாடுகள் கன்று பருவத்திலேயே இறைச்சிக்காக விற்கப்பட்டு வருகின்றன.

இனவிருத்திக்குப் பயன்படுத்தப்படும் காளை இனங்கள் இப்படி விற்கப்படுவதன் மூலம் நம்முடைய மாட்டு இனங்கள் வேரோடு அழிந்துவிடும் நிலை உருவாகியுள்ளது.

நாட்டு மாடு இறைச்சிக்கு வரவேற்பு: வெளிநாடுகளில் நாட்டு மாடு இறைச்சிக்கு பெரும் வரவேற்பு உள்ளது. நம் நாட்டு மாடுகள் இயற்கையான முறையில் நோய் தடுப்பு ஊசிகள், மாத்திரைகள் இல்லாமல் வளர்க்கப்படுகின்றன. எனவே, இதன் இறைச்சிக்கு வெளிநாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளதால், வணிகப் போட்டியில் நம் நாட்டு மாடுகள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

இறைச்சிக்காக நாட்டு காளைகள் அழிக்கப்பட்டுவிட்டால், பின்பு வெளிநாட்டு இனங்களை இந்தியாவுக்கு எளிதாக இறக்குமதி செய்ய முடியும். பின்பு, வெளிநாட்டு மாட்டு இனங்களை வளர்ப்பதற்கான மருந்துகளையும் இங்கு விற்பனை செய்ய முடியும்.

இதுகுறித்து சேனாபதி காங்கயம் காளைகள் ஆராய்ச்சி மையத்தின் (திருப்பூர்)

நிர்வாக இயக்குநர், கார்த்திகேயா சிவசேனாபதி கூறியது: ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரும் விலங்குகள் நல அமைப்பு, புளூ கிராஸ், “பீட்டா’ ஆகிய அமைப்புகள் நம் பாரம்பரிய இனங்களை அழிப்பதற்காக வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி மனு தாக்கல் செய்தபோது 40 மூத்த வழக்கறிஞர்கள் உள்பட 70 பேர் சென்று இருக்கின்றனர். இவர்களுக்கு ரூ.2.50 கோடி வரை சம்பளமாக செலவாகும். அவை அவ்வளவு வசதியான அமைப்புகளா? அல்லது அவர்களுக்கு அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? அல்லது யார் இதற்கு முதலீட்டாளர்? இதனை தமிழக அரசு விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும்.

தமிழகத்தில் 6 மாட்டு இனம் உண்டு. அதில் 4 மாட்டு இனங்கள். காங்கயம், புளியக்குளம், மலமாடு, ஒம்பலச்சேரி ஆகியவை முக்கிய நாட்டு மாடு இனங்கள். ஜல்லிக்கட்டை முடக்குவதன் மூலம் இரண்டு விதமான லாபங்கள் உள்ளன. நாட்டு மாடு இனங்களை அழித்துவிட்டால் ஐரோப்பிய மாட்டு இனங்களான ஜெர்ஸி, சுவிஸ்ப்ரோ, ஹோல்ஸ்டின் போன்ற மாடுகளை இந்தியாவுக்கு கொண்டு வந்துவிடலாம்.

இரண்டாவது லாபம், ஐரோப்பிய மாடுகளை நம்மால் தடுப்பூசி போடாமல் வளர்க்க முடியாது, பின்பு அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் இங்கு வரும். இதற்கான முன்னேற்பாடுகளே ஜல்லிக்கட்டு மீதான தடை. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நடத்துபவர்கள் பெரும் பணக்காரர்கள். இவர்கள் ஏழை விவசாயிகளிடம் சண்டை போடுகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்காட ரூ.2 கோடி வேண்டும், விவசாயிகளால் எப்படி முடியும்? ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியின்போது ஒரு மனிதன் 15 முதல் 30 வினாடிகள்தான் காளையுடன் தொடர்பில் இருப்பான், இது ஒரு ஏறு தழுவுதல். இது எப்படி காளைகளை துன்புறுத்துவதாகும்?

மாட்டைக் கொல்வதற்கு வாயை மூடிக்கொண்டு இருக்கும் அமைப்புகள் 30 விநாடிகள் விளையாட்டை சகித்துக்கொண்டு இருக்க முடியாதது ஏன்? ஒவ்வொரு கிராமத்திலும் கோயில் காளைகள் இருக்கும்.

விவசாயிகளால் காளையைப் பராமரிக்க முடியாது. எனவே கோயில் காளைகளை பலரும் சேர்ந்து பராமரிப்பார்கள், அந்தக் கோயில் காளைகளைத்தான் இனப்பெருக்கத்துக்கு உபயோகிப்பார்கள்.

எனவே இந்த இனப்பெருக்க காளையை அழித்தால்தான், நாட்டு மாடு இனத்தை அழிக்க முடியும். இது நமது மாட்டு இனத்தை அழிப்பதற்காக நடக்கும் சர்வதேச சதி என புரிந்துகொள்ள வேண்டும். மத்திய அரசும் மாநில அரசும் இதனைத் தடுக்க வேண்டும் என்றார் கார்த்திகேயா சிவசேனாபதி.

குறைந்து வரும் காங்கயம் மாடுகள்!

1990-ஆம் ஆண்டில் தமிழகத்தில் காங்கயம் இன மாடுகளின் எண்ணிக்கை 11 லட்சத்து 74 ஆயிரமாக இருந்தது. ஆனால், 2000-ஆம் ஆண்டில் இவை 4 லட்சத்து 40 ஆயிரமாக குறைந்து, இப்போது 1.25 லட்சம் காங்கயம் மாடுகள் மட்டுமே இருக்கின்றன என்பது வேதனைக்குரிய செய்தி.

-http://www.dinamani.com

TAGS: