நடிகர் சஞ்சய் தத் வழக்குத் தொடர்பாக, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது, ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்த நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டு 5 ஆண்டு சிறை தண்டனை பெற்று புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் நல்லொழுக்கம் அடிப்படையில் வரும் பிப்ரவரி 27ம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளார்.
இந்நிலையில், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு ராஜீவ் கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் எரவாடா சிறை கண்காணிப்பாளருக்கு மனு அனுப்பியுள்ளார்.
பேரறிவாளன் தனது மனுவில், ஆயுத சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்று, தற்போது எரவாடா மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய்தத் வருகிற பிப்ரவரி மாதம் 27ம் திகதி முன்கூட்டியே விடுதலை செய்யப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
எனவே சஞ்சய்தத் விடுதலை தொடர்பான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் எனக்கு வழங்கவேண்டும்.
சஞ்சய் தத், அரசியலைப்பு சட்டத்தின் பிரிவு 161-ன் கீழ் முன் கூட்டியே விடுதலை செய்யப்படுகிறாரா? அல்லது குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவுகளின் கீழ் அல்லது மராட்டிய மாநில சிறை விதிகளின் கீழ் விடுதலை செய்யப்படுகிறாரா? என்பது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும்.
நானும் இதே சட்டப்பிரிவுகளின் கீழ் முன்கூட்டியே விடுதலை பெறுவதற்காக இந்த விவரங்களை கேட்கிறேன்.
எனவே இந்த ஆவணங்கள் அனைத்தும் 48 மணி நேரத்தில் எனக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றும் இதற்கான செலவு தொகையை வழங்கவும் தயாராக உள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.newindianews.com