பனாமா கால்வாயில் கவிழ்ந்த படகு.. பஞ்சாபைச் சேர்ந்த 25 இளைஞர்கள் மூழ்கி பலி

panamaசண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தசை் சேர்ந்த 25 இளைஞர்கள், அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்றபோது படகு பனாமா கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்ததாக தகவல் வந்துள்ளது.

இதுகுறித்து விசாரிப்பதற்காக பஞ்சாப் அரசு ஒரு குழுவை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது. கொலம்பியா நாட்டின் துறைமுக நகரமான டர்போ மற்றும் தென் அமெரிக்க நாடானா பனாமாவுக்கு இடையே, பனாமா கால்வாயில் இந்தப் படகு விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவரான ஜலந்தரைச் சேர்ந்த சோனு என்பவர் பஞ்சாப் மாநிலம் கபூர்தாவில் உள்ள இரு குடும்பங்களுக்கு விபத்து குறித்து தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் கபூர்தலா போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். கபூர்தலாவைச் சேர்ந்த சுற்றுலா ஏஜென்டுகளான ஹர்பஜன் சிங், குல்வீந்தர் சிங் முல்தானி ஆகியோர் மூலமாக தங்களது மகன்கள் அமெரிக்காவுக்கு பயணப்பட்டனர் என்றும், தங்களது பிள்ளைகளின் கதி என்ன என்று தெரியவில்லை என்றும் அவர்கள் புகாரில் கூறியிருந்தனர்.

இதுகுறித்து கபூர்தலா எஸ்.பி. ராஜீந்தர் சிங் கூறுகையில், இதுதொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் அந்த இரு ஏஜென்டுகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களைக் கைது செய்துள்ளோம். எத்தனை பேரை அவர்கள் அனுப்பினர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பச்சன் சிங் என்பவர் கூறுகையில், எனது மகன் 21 வயதான குர்வீந்தர் சிங் 12வது முடித்து விட்டு வேலையில்லாமல் இருந்தான். ஹர்பஜன் சிங்கிடம் ரூ. 10 லட்சம் கொடுத்து வேலை வாய்ப்பு கோரியபோது அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி அனுப்பினார் ஹர்பஜன் சிங். முதலில் ரூ. 27 லட்சம் கேட்டார் ஹர்பஜன் சிங். ஆனால் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ரூ. 24 லட்சத்துக்கு சம்மதித்தார். ரூ. 10 லட்சத்தை அட்வான்ஸ் ஆக பெற்றுக் கொண்டு எனது மகனை இருவரும் அனுப்பி வைத்தனர். முதலில் மாலத்தீவுக்குக் கூட்டிப் போயுள்ளனர்.

பின்னர் 2 மாதங்கள் அங்கேயே வைத்திருந்தனர். அதன் பின்னர் பிரேசிலுக்கு அவர்களை அனுப்பியுள்ளனர். எனது மகன் கடந்த டிசம்பர் 22ம் தேதி என்னிடம் போனில் பேசினான். தான் இன்னும் அமெரிக்கா போய்ச் சேரவில்லை என்று அவன் கூறினான். இதையடுத்து முல்தானியிடம் நான் சண்டை பிடித்தேன். அதற்கு அவர், இன்னும் 3 நாட்களில் உங்களது மகன் அமெரிக்காவுக்குப் போய் விடுவான் என்று கூறினார்.

இந்த நிலையில்தான் 25 இளைஞர்கள் படகு கால்வாயில் மூழ்கி பலியான தகவல் வந்துள்ளது. இதனால் அமெரிக்கக் கனவுடன் பிள்ளைகளை அனுப்பி வைத்த பஞ்சாபைச் சேர்ந்த பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

ஜனவரி 10ம் தேதி இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தாமதமாகத்தான் இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட இளைஞர்கள் அத்தனை பேருக்கும் வயது 20களில்தான் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொவரும் குறைந்தது ரூ. 10 லட்சம், அதிகபட்சம் ரூ. 25 லட்சம் கொடுத்து இந்த சட்டவிரோத கும்பலால் அமெரிக்காவுக்கு படகு மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து உண்மை நிலையை அறியவும், 25 இளைஞர்கள் குறித்த நிலையை அறியவும் பஞ்சாப் அரசு குழு ஒன்றை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் அது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது.

tamil.oneindia.com

TAGS: