14 ஐ.எஸ். ஆதரவாளர்கள் கைது

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைப் போன்று, இந்தியாவிலும் புதிய பயங்கரவாத அமைப்பை ஏற்படுத்த முயன்றதாக அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் 14 பேரை தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது.

இதன்மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவர்கள் நிகழ்த்த இருந்த பயங்கரவாதத் தாக்குதல்களை என்ஐஏ முறியடித்துள்ளது.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைப் போன்று “ஜனூத்-உல்-கலிபா-இ-ஹிந்த்’ (இந்திய காலிப்புக்கான ராணுவம்) என்ற புதிய பயங்கரவாத அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக என்ஐஏவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் போலீஸார், மத்திய பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் என்ஐஏ வெள்ளிக்கிழமை அதிரடிச் சோதனை நடத்தியது.

அப்போது “ஜனூத்-உல்-கலிபா-இ-ஹிந்த்’ அமைப்பு தலைவர் ஷேக் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும், கூடுதல் விசாரணைக்காக தில்லிக்கு கொண்டு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், நன்கு திட்டமிட்டு “ஜனூத்-உல்-கலிபா-இ-ஹிந்த்’ அமைப்பு உருவாக்கப்படுவது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 14 பேரிடம் இருந்தும், 42 செல்லிடப் பேசிகள், லேப் டாப்புகள், வெடிபொருட்கள், பயங்கரவாத வாசகம் அடங்கிய பிரசுரங்கள், டெட்டனேட்டர்கள், வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் 8 செல்லிடப் பேசிகள், ஷேக்கிடம் இருந்து கைப்பற்றப்பட்டவை ஆகும்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறியபோது, 5 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், 9 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மும்பை மற்றும் பெங்களூரில் உள்ள காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், “5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒருவர் விடுவிக்கப்பட்டு விட்டார். 8 பேர் சனிக்கிழமை (ஜன.23) முறைப்படி கைது செய்யப்படுவர்’ என்றன.

கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர்களை என்ஐஏ வெளியிட்டுள்ளது. இருப்பினும், அவர்களை அப்பாவிகள் என்றும், பயங்கரவாதத் தாக்குதல் திட்டத்துக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லையென்றும் அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் சதித் திட்டம் முறியடிப்பு: அதேசமயம், புதிய அமைப்புக்கு ஷேக் என்பவர் தலைவராகவும், ஹுடா என்பவர் நிதி விவகாரத்தை கையாள்பவராகவும் செயல்பட்டு வந்ததாக என்ஐஏ தெரிவித்துள்ளது. சிரியாவில் செயல்படும் ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் இணையதளத்தில் தொடர்ந்து அவர்கள் தொடர்பில் இருந்தனர் என்றும் என்ஐஏ குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் மேலும் தெரிவித்ததாவது:

நீண்ட காலமாக அவர்களது நடவடிக்கைகளை கண்காணித்து வந்தோம். இந்நிலையில், நாட்டின் முக்கியப் பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும்படி அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்தே, அவர்களை நாங்கள் கைது செய்தோம்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 18 முதல் 30 வயது வரையுடையவர்கள். சிலர் மென்பொருள் பொறியாளர்கள் ஆவர். ஹவாலா முறை மூலம் அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி அனுப்பப்பட்டு வந்தது. இந்தவகையில், ஷேக்குக்கு அண்மையில் ரூ.6 லட்சம் அனுப்பப்பட்டது.

தெலங்கானா, மகாராஷ்டிரம், தில்லி, அஸ்ஸாம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தங்களது அமைப்பை விரிவாக்கம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 8 மாதங்களில், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற அவர்கள், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்களை ரகசியமாக புகைப்படங்கள் எடுத்துள்ளனர் என்று தேசியப் புலனாய்வு அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், எந்தெந்த இடங்களை அவர்கள் படமெடுத்தனர் என்ற தகவல்களை தேசியப் புலனாய்வு அமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை.

கைது விவரம்: மும்பையில் இருந்து 3 பேரும், ஹைதராபாத், பெங்களூரில் இருந்து தலா 4 பேரும், மங்களூரு, தும்கூர், லக்னௌ ஆகிய இடங்களில் இருந்து தலா ஒருவரும் தேசிய புலனாய்வு அமைப்பால் சுற்றி வளைக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் இந்தியன் முஜாஹீதீன் அமைப்பைச் சேர்ந்த சபி ஆர்மருடன் தொடர்பில் இருந்து வந்தனர் என்றும், சபி ஆர்மர் தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

கர்நாடகத்தின் மங்களூரில் கைது செய்யப்பட்ட நஜ்முல் ஹுதா, இந்தியாவில் தேடப்படும் 20 பயங்கரவாதிகளில் 2-ஆவது இடத்தில் இருக்கிறார். பிகாரைச் சேர்ந்த இவர் பெங்களூரு ஆர்.வி. பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டு, மங்களூரு பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் வேலையைக் கவனித்து வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

நாட்டின் 67-ஆவது குடியரசு தினம் வரும் 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதைச் சீர்குலைக்கும் வகையில், தில்லி உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் குண்டுவெடிப்பு போன்ற தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பயங்கரவாத அமைப்பை உருவாக்கியதாக 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

-http://www.dinamani.com

TAGS: