2015-16 ஆம் ஆண்டிற்கான தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின் முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் மதுவுக்கு அடிமையானோரின் எண்ணிக்கையும், அருந்தப்படும் மதுவின் அளவும் பெருமளவில் அதிகரித்திருப்பதாக வெளியாகியுள்ள உண்மை அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு முடிவுகளின்படி தமிழகத்தில் 15-49 வயது ஆண்களில் 46.70 விழுக்காட்டினர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. 2005&06 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இது 41.50 விழுக்காடாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை 5.20% அதிகரித்திருக்கிறது. இதே வயதுடைய பெண்களிடையேயும் மதுப் பழக்கம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருக்கிறது. 2005-06 ஆம் ஆண்டில் 0.10 விழுக்காடு பெண்கள் மட்டுமே மதுவுக்கு அடிமையாகியிருந்தனர். ஆனால், இப்போது இது 0.40 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. பெண்களைப் பொறுத்தவரை மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவு தான் என்ற போதிலும், இது அதிகரித்து வரும் வேகம் மிகவும் ஆபத்தானது ஆகும். மதுவுக்கு பெண்கள் அடிமையாவது இதே வேகத்தில் நீடித்தால் இன்னும் சில பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் மது அருந்துவதை யாராலும் தடுக்க முடியாது.
இதே காலத்தில் தமிழகத்தின் பீர் மற்றும் மது விற்பனை இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. 2005-06 காலத்தில் மாதம் தோறும் 19.07 லட்சம் பெட்டிகள் மது விற்பனையானது. இப்போது அது இரண்டரை மடங்கு அதிகரித்து 46.16 லட்சம் பெட்டிகளாக உள்ளது. அதேபோல் பீர் விற்பனை 10.90 லட்சம் பெட்டிகளில் இருந்து 20.13 லட்சம் பெட்டிகளாக அதிகரித்திருக்கிறது. 10 ஆண்டுகளில் மது விற்பனை இரு மடங்காக அதிகரிப்பது என்பது மிகவும் ஆபத்தான போக்கு ஆகும். 2002-03 ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால் மது விற்பனை அதிகரிப்பு இன்னும் கூடுதலாக இருக்கும். இதேநிலை தொடர்ந்தால் அடுத்த பத்தாண்டில் அனைத்து ஆண்களும் மொடாக்குடியர்களாக மாறும் ஆபத்துள்ளது.
குடும்பநலக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட 14 மாவட்டங்களில் சதவிகித அடிப்படையில் குடிகாரர்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் 4&ஆவது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களைப் பிடித்துள்ள திரிபுரா, அந்தமான், சிக்கிம் ஆகியவை சிறிய மாநிலங்கள் என்பதால், அதிக குடி அடிமைகளைக் கொண்ட பெரிய மாநிலம் என்ற அவப்பெயர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. மதுவுக்கு அடிமையானோர் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தாலும் தமிழகம் தான் (1.10 கோடி பேர்) முதலிடத்தை பிடித்துள்ளது.
தமிழ்நாடு இத்தகைய குடிகார மாநிலமாக மாறியிருப்பதற்கு காரணம் டாஸ்மாக் மதுக்கடைகள் தான். 2002-03 ஆம் ஆண்டில் மதுக்கடைகள் அரசுடைமை ஆக்கப்படுவதற்கு முன்பு வரை தமிழகத்தில் மது விற்பனையும், குடிக்கு அடிமையானோர் எண்ணிக்கையும் கட்டுக்குள் தான் இருந்தது. தமிழக அரசே மதுக்கடைகளை நடத்தத் தொடங்கிய பிறகு தான் இவை ராக்கெட் வேகத்தில் அதிகரித்தன. இவ்வாறாக தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றிய பெருமை அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிகளையே சாரும். தமிழக நலன் சார்ந்த அனைத்து விஷயங்களிலும் எதிரெதிரான நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் இந்த இரு கட்சிகளும் மக்களைக் கெடுக்கும் மதுவை விற்பனை செய்வதில் மட்டும் ஒத்த நிலைப்பாட்டை கடைபிடித்து வருவது தான் தமிழகத்தின் சாபக்கேடு ஆகும்.
கடந்த 10 ஆண்டுகளில் மது விற்பனை அதிகரித்துள்ள நிலையில், மக்களுக்கு நன்மை பயக்கும் விஷயங்களில் தமிழகம் மிகவும் பின்தங்கியே உள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் பெறும் வீடுகளின் அளவு 91.40 விழுக்காட்டிலிருந்து 90.60 விழுக்காடாக குறைந்துள்ளது. குழந்தைகளுக்கு பல்வேறு நோய்களுக்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்து வழங்கப்படும் விகிதம் 5.50% முதல் 11.20% வரை குறைந்துள்ளது. குழந்தைகள்- தாய்மார்களுக்கு நுண்ணூட்டச்சத்து நிறைந்த உணவு வழங்குவதிலும் குறிப்பிடும்படி முன்னேற்றம் எட்டப்படவில்லை. 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க.வும், தி.மு.கவும் மது விற்பதை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தவில்லை என்பதற்கு இதுவே உதாரணம்.
தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள ஆறுதலான விஷயம் என்னவென்றால் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் மதுவின் பிடியிலிருந்து மக்களை மீட்டுவிடலாம் என்பது தான். பா.ம.க.வைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது உருவாக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின்படி தமிழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் போதைப்பாக்கு உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் தடை செய்யப்பட்டன. அதன்பயனாக புகையிலை பயன்படுத்தும் ஆண்களின் அளவு 8.40 விழுக்காடும், பெண்களின் அளவு 0.60 விழுக்காடும் குறைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, கடந்த ஓராண்டில் 40.40% பெண்களும், 23.30% ஆண்களும் புகையிலைப் பழக்கத்தை கைவிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது புகையிலை பொருட்கள் கிடைப்பது தடைபட்டதால், அவற்றை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்திருக்கிறது. இது மதுவுக்கும் பொருந்தும்.
எனவே, 2016 ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைந்தவுடன் முதல் கையெழுத்தின் மூலம் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்; அதன்மூலம் மதுவின் பிடியிலிருந்து மக்களை மீட்டு, அனைத்து குடும்பங்களிலும் அமைதியும், வளமும் நிலவ பாட்டாளி மக்கள் கட்சி வகை செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-http://www.nakkheeran.in
குடிகார தமிழன் தமிழினத்தில் இருக்கவே கூடாது .அது ஒன்றே தமிழினம் முன்னேறவும்
சுதந்திரமாகவும் தன்மானத்துடனும் வாழவும் வழிவகுக்கும் .
மாறிமாறி ஆண்டுக்கொண்டுள்ள திராவிட கட்சிகள் இருக்கும் வரை தமிழன் திருந்தப்போவதில்லை தமிழனை போதைக்கு அடிமையாக்கி நாட்டையும் குட்டிச்சுவராக்கி ஜாதிக்கலச்சரத்தயும் வளர்த்து தினம் கொலை, மதுக்கடைகள் விரிவாக்கம் நாடு எங்கேய் சென்றுக்கொண்டு இருக்கிறது ?வரும் தேர்தலியில் இந்த இரண்டுக் கட்சிகளையும் மூட்டைக்கட்டி அனுப்பினால் தமிழனும் ,நாடும் உருப்படும் !
தகர தமிழகத்தில் பொங்கல் தின மது விபனை மாத்திரம் 350 கோடி ரூபாய்கள் …..இலவச சாராயம் பக்கெட்டில் அடைத்து சங்க இலக்கியங்களை காட்டி குப்பனையும் சுப்பனையும் குடிகாரர்கள் ஆக்கிய எங்கள் பகுத்தறிவு வியாபாரியின் மகிமை என்னே ..புல்லரிகின்றது
தமிழ் நாட்டில் மட்டும்தான் குடிக்குரார்களா? எந்த நாட்டில் இருந்தாலும் தமிழன் குடிக்காரந்தான் … திராவிட கட்சிகளோஅரசாங்கமோ காரணம் இல்லை .. சொந்த புத்தி இல்லாதவன் மற்றவனை குறை சொல்லி என்ன லாபம் ?
தன்னலமில்லா தமிழன் தமிழ் நாட்டை ஆளவேண்டும் மதுக்கடை வைத்து பிழைப்பு நடத்ததும் அரசியல் ஒழிக்கப்படவேண்டும் தமிழக மக்கள் மாறாவிட்டால் ,தமிழனனின் தலைவிதி என்றும் மாறாது !
Anonymous…. தகர தமிழகம் என்றால் உங்க யாழ்பாணம் எப்படி? யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வடிவேலு பாணியில் முடியிருந்த சாராயக்கடையைத் திறக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். குறித்த நேரத்தின் பின்னர் மூடப்பட்ட சாராயக்கடையைத் திறந்து தமக்கு சாராயத்தைத் தந்துவிட்டு மீண்டும் மூடுமாறு சாராயக்கடைக்கு காவலுக்கு நின்றிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை கேட்டுள்ளனர் இருவர். அவர் அத்ற்கு மறுக்கவே அவ்விடத்தில் சிறு நீர் கழித்து அசிங்கம் செய்து கலாட்டாவில் ஈடுபட்டுள்ளார்கள்.
மேலும் மூடியிருந்த சாராயக் கடையின் கதவுகளை , கைகளால் திறக்க முற்பட்டுள்ளார்கள். அது பலனளிக்கவில்லை. ஆனால் போதை தலைக்கேறிய நிலையில் , அவர்கள் அங்கேயே புரண்டு படுத்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. காவலாளி பொலிசாருக்கு கொடுத்த தகவலை அடுத்து. பொலிசார் வந்து அவர்களை அலேக்காக தூக்கிச் சென்றுள்ளார்கள் என்று கூறப்படுகிறது
….நன்றி அதிர்வு ஸ்ரீலங்கா
யாழ்ப்பான மகனே வா பதில்கூறு !! தமிழகத்தை அங்கே உள்ள மானத்தமிழன் பார்த்துகொள்வான் ..
இப்போ நிலைமை மாறிடிச்சு ..தாங்கள் கூறும் தகர தமிழகம் நாளுக்குநாள் தங்க தமிழகமாக அறிவுள்ள இளைய தமிழ் பிள்ளைகள் மாற்றுகிறார்கள் ..இப்பொழுது உள்ளதேவை வந்தேறி திருட்டு திராவிட ஆட்சியாளர்களை அகற்றுவது ..அது சரியான நேரத்தில் அகற்றபடுவார்கள் ..தங்கள் யாழ்பாணத்தில் நாளுக்குநாள் மிகவும் வருந்தத்தக்க சம்பவங்கள் நடைபெறுகிறது ..வேணுன்னா மலேசிய தமிழனைவிட ஒருபடிமேல் சென்று ஆதாரசுட்டிகளுடன் தங்களுக்கு செம்பருத்தி உடாக பதிலளிப்போம் .. குறை யாரிடமில்லை ? அதிகபிரசங்கதனம் வேணாமே ..