அணு ஆயுத போட்டியை தடுக்கவில்லை: இந்தியா–பாகிஸ்தான் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு

ind_pakதிஹேக், ஜன.31– பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறியநாடு மார்ஷல் தீவுகள். அங்கு 55 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இரண்டாம் உலகப் போரின் போது இந்த தீவுகளை அமெரிக்கா கைப்பற்றியது. பின்னர் 1986–ம் ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.

இதற்கிடையே அடிமைப்பட்டு கிடந்த காலக்கட்டத்தில் சோவியத் ரஷியாவுடன் ஏற்பட்ட பனிப்போர் காலத்தில் அங்கு பல்வேறு அணு ஆயுத பரிசோதனைகளை அமெரிக்கா நடத்தியது. 1954–ம் ஆண்டு மார்ச் மாதம் மார்ஷல் தீவுகளின் ஒரு பகுதியான பிகினி தீவில் மாபெரும் 15 மெகாடன் அணுகுண்டு சோதனை நடத்தியது.

அதில், பிகினி தீவு முற்றிலும் அழிந்து காணாமல் போனது. அந்த அணுகுண்டு ஹீரோசிமாவில் வீசப்பட்டதை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்தது. அந்த பரிசோதனையின் 60–வது ஆண்டு நிறைவையொட்டி 2014–ம் ஆண்டு மார்ச் மாதம் நெதர்லாந்தில் திஹேக் நகரில் இயங்கும் ஐ.நா. சபையின் சர்வதேச கோர்ட்டில் மார்ஷல் தீவுகள் வழக்கு தொடர்ந்தது.

சர்வதேச அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் வாக்களித்திருந்தபடி இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், வடகொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுத போட்டியை தடுத்து நிறுத்தவில்லை. மேலும் அணு ஆயுதங்களை கைவிடவிவும் தவறி விட்டன’’ என குற்றம் சாட்டியிருந்தது.

அந்த மனுவை கோர்ட்டு பரிசீலித்தது. மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய நாடுகள் மட்டுமே கோர்ட்டின் அதிகாரத்தை அங்கீகரித்து இருந்தன.

எனவே இந்த 3 நாடுகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மட்டும் விசாரிக்க ஒப்புக் கொண்டது. வருகிற மார்ச் 7 முதல் 16–ந்தேதி வரை தனித்தனியாக விசாரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.maalaimalar.com

TAGS: