இந்திய மீனவர்களை மீண்டும் தாக்கியது இலங்கை கடற்படை

fishermen_bort_001எச்சரிக்கை எதுவும் கொடுக்காமல் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி கடந்த மாதம் 25ம் திகதி, ராமேஸ்வரம் உள்ளிட் 6 மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கினர்.

அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து, 5 நாட்களுக்கு போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து, ராமேஸ்வரத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் இரவில், தனுஷ்கோடி-கச்சத்தீவு இடைப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது, கன்போட் கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், எவ்வித எச்சரிக்கையும் இன்றி, படகுகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர்.

இதனால் நிலை குலைந்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் செய்வதறியாது படகுகளை திருப்பிச் செல்ல முயன்றனர். விரட்டி வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளில் இருந்த வலைகளை வெட்டி கடலில் வீசினர்.

எனினும் படகுகளையும் சேதப்படுத்தி விரட்டியடித்தனர். ரப்பர் குண்டுகளில் சுட்டதால், மீனவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதையடுத்து, ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன் பிடித்துவிட்டு நேற்று காலை கரை திரும்பினர். மீன்பாடு மிகவும் குறைவாகவே இருந்தது. இலங்கை கடற்படையின் தாக்குதலால், பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

சிறைபிடிப்பு: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்திலிருந்து 109 படகுகளிலும், கோட்டைப்பட்டினத்திலிருந்து 241 படகுகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே நேற்று முன்தினம் இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 2 படகுகளை சுற்றிவளைத்தது.

இதில் இருந்த விக்னேஷ் (23), பழனி (45), மணிகண்டன் (23) உள்ளிட்ட 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதனால் மற்ற படகு மீனவர்கள் வேகமாக கரை திரும்பி வருகின்றனர்.

காங்கேசன்துறை கடற்படை முகாமில் உயர் அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு, யாழ்ப்பாணம் கடல் தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

ஊர்க்காவல்துறை கோர்ட்டில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி முகமதுரியா, அவர்களை பெப்ரவரி. 12 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் குறைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: