முடிந்தால் கொள்ளையடி! முடியாவிட்டால் வாயைப் பொத்து!

கட்டம் கட்டப்படுவார் பழ. கருப்பையா என்பது முன்பே எதிர்பார்க்கப்பட்டதுதான். நீக்கம் பற்றிய அறிவிப்பு தாமதமாக வந்திருக்கிறது. அவருக்கு எல்லாமே தாமத மாகத்தான் வருகிறது! நீக்கம் பற்றிய அறிக்கையில் கட்சித் தலைமை சொல்லியிருக்கும் குற்றச் சாட்டுகளில் முதலாவது, கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டார் என்பது.

அதிகார வர்க்கமும், கவுன்சிலர்களும், எம்.எல்.ஏ.க்களும் கூட்டாக மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள் என்றார் பழ. கருப்பையா. அவரைக் கண்டிப்பதால் கொள்ளையடிப்பதுதான் கட்சியின் கொள்கையும் கோட் பாடும் என்று தலைமை ஒப்புக்கொள்கிறது. “முடிந்தால் நீயும் கொள்ளையடி, முடியாவிட்டால் வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இரு’ என்பதுதான் எம்.எல்.ஏ.க்களுக்கான கோட்பாடு என்பதையும் இந்த அறிக்கை மக்களுக்குப் புரியவைக்கிறது.

“கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டார்’ என்பது இரண்டாவது குற்றச்சாட்டு. அதாவது “துக்ளக்’ ஆண்டுவிழாவில் பழ. கருப்பையா நாட்டின் நிலையைக் கண்டு வருந்தும் குடிமகனாகப் பேசினார். அது தவறு. அம்மா கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் அவர் வார்த்தைக்கு வார்த்தை அம்மாவின் ஆணைக்கிணங்க இங்கே வந்திருக்கிறேன், அம்மாவின் ஆணைக்கிணங்க வேட்டி கட்டியிருக்கிறேன், அம்மாவின் ஆணைக்கிணங்க வாயைத் திறந்து பேசுகிறேன், அம்மாவின் ஆணைக்கிணங்க சூரியன் உதிக்கிறது, அம்மாவின் ஆணைக்கிணங்க மழை பெய்கிறது என்று சொல்லியிருக்க வேண்டும். நொடிக்கு நொடி, மூச்சுக்கு மூன்று தரம் அம்மா நாமம் சொல்லாத காரணத்தினால் அவர் கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் செயல்பட்டி ருக்கிறார் என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை, எது கண்ணியம் என்பது இந்த நாலரை வருட கால எம்.எல்.ஏ.வுக்குப் புரியவில்லையே!

“கட்டுப்பாட்டை மீறிக் கட்சிக்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும்விதத்தில் செயல்பட்டார்’ என்பது இன்னொரு குற்றச்சாட்டு.

மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே அரசியல்வாதி களும் அதிகாரிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று அவர் சொல்லியிருந்தால் அது கட்சிக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கும். ஆனால் லஞ்சம் வாங்கு கிறார்கள் என்று பொத்தாம் பொது வாகச் சொன்னது கட்சிக்கு அவப் பெயரை உண்டாக்கியிருக்கிறது. லஞ்சத்தை வெறுக்கும் ஒரு எம்.எல்.ஏ கட்சியில் இருந்தால் கட்சியை எப்படி நடத்துவது? மற்ற எம்.எல்.ஏ.க்களும் கெட்டுப்போய் விடுவார்களோ என்ற தலைமையின் அச்சம் நியாயமானதுதான். ஆக, நீக்கம் சரியே.

அவர் விசாரணையின்றி நீக்கப்பட்டதில் தவறு இல்லை. எல்லாக் கட்சித் தலைவர்களும் அப்படித்தான் செயல்பட்டிருக் கிறார்கள். இது இந்திய ஜனநாயக வரலாறு. நம் கட்சித் தலைவர்கள் பேச்சில் ஜனநாயகவாதிகள்; செயல்பாட்டில் சர்வாதிகாரிகள் – இதற்கு எந்தக் கட்சித் தலைமையும் விலக்கல்ல.

“டயர் பஞ்சராகிவிட்டது; டிக்கியில் வைத்திருக்கிறேன்’ என்று வார்த்தை ஜாலம் காட்டிய கலைஞர் கருணாநிதி, டயரை வெகுவிரைவில் டிக்கியிலிருந்து தூக்கி எறிந்தார். அப்போது எறியப்பட்டவருடன் சிலர் வெளியேறினார்கள், பிறகு தாய் வீட்டுக்கே திரும்பிவிட்டார்கள். ஆனால் பழ. கருப்பையாவுக்குப் பின்னால் யாரும் வரமாட்டார்கள். அ.இ.அ.தி.மு.க.வில் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் யார் வீட்டிலாவது கருப்பையா என்று மகனோ, மாப்பிள் ளையோ இருந்தால் உடனடியாகப் பெயர் மாற்றம் நடக்கும். அவர்களுக்கு அம்மாவிடம் அந்த அளவுக்கு விசுவாசம் இருக்கிறது.

இரு முக்கிய கட்சிகளின் தலைமை என்று பார்க்கும் போது கலைஞர் கருணா நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே ஒற்றுமைகளில் வேற்றுமைகள் உண்டு. கருணாநிதி, கட்சியின் பொதுக்குழு விவாதிக்கும்; செயற்குழு முடிவு செய்யும் என்று சொல்லி ஒரு பகட்டான ஜனநாயகப் பொன்னாடையை அணிந்து கொள்வார். ஆனால் அம்மா ஜெயலலிதா ஓர் உண்மை விளம்பி. ‘”நான் ஆணையிட்ட படி’‘”என் அரசாங்கத்தில்’ என்றுதான் சொல்வார். எல்லோருடைய ஆட்சியிலும் பொய்களுக்கு முலாம் பூசுவது தான் உண்மை.

ஆளும் கட்சியின் போக்கை உள்ளேயிருந்தபடியே விமர்சித்த பழ. கருப்பையாவை துறைமுகம் தொகுதி மக்கள் சுயேச்சை வேட்பாளராக நிறுத்தவேண்டும். பிற கட்சிகள் ஒன்றுகூடி எதிராக யாரையும் நிறுத்தாமல் அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட உதவ வேண்டும். விரும்பினால் வீர, தீரப் பெண்மணியும் உலகின் தலைசிறந்த ஜனநாயகவாதியுமான ஜெயலலிதா பழ.கருப்பையாவை எதிர்த்துத் துறைமுகம் தொகுதியில் போட்டியிடட்டுமே.

ஒப்பனைப் பொய்கள் உலாவரும் தேர்தல்களில் உண்மைகள் களமிறங்குவதில்லை. ஒதுங்கி நிற்கும் உண்மையை மதிக்க விரும்பு பவர்கள் பழ. கருப்பையாவைக் களமிறக்கலாம். நூறு கௌரவர்களுக்கிடையே ஒரு விதுரர்தான் இருந்தார். எண்ணிக்கை மிகுதியே ஆட்சி என்றுள்ள இந்த ஜனநாயகக் காலத்தில் ஒரே ஒரு உண்மைக் குரலாவது நம் சட்ட மன்றத்தில் ஒலிப்பதற்கு பொது மக்களும் அரசியல்கட்சிகளும் ஒன்றுசேரட்டுமே.

-http://www.nakkheeran.in

TAGS: