தலித் மக்களுக்கான இட ஒதுக்கீடு தொடரும்: கோவை கூட்டத்தில் மோடி திட்டவட்டம்

modi-sepeechsகோவை: டீ விற்பனை செய்த ஏழை ஒருவர் நாட்டின் பிரதமராக முன்னேறியது சிலருக்கு பெரும் வயிற்றெரிச்சலை உருவாக்கியுள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி, கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், கோவை கொடீசியா மைதானத்தில் பாஜக பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

லட்சக்கணக்கான தொண்டர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: வணக்கம். இன்று கோவை மாநகரம் வந்ததில் மகிழ்ச்சி (இவற்றை தமிழில் தெரிவித்தார்). மக்கள் கடல் அலைபோல இங்கு கூடியுள்ளனர். கோவை, ஈரோடு, திருப்பூர் என எந்த ஊராக இருந்தாலும், நான் பலமுறை வந்துள்ளேன். குஜராத்தில் முதல்வராகும் முன்பே பல முறை வந்து இங்குள்ள பிரச்சினைகளை கேட்டறிந்துள்ளேன். பிரதமரான பிறகு கோவைக்கு பல முறை நான் வந்தாலும், மக்களை சந்திக்கும் கூட்டத்தில் பங்கேற்பது இதுதான் முதல்முறை.

உங்கள் அன்புக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கோவை மண்ணில் இருந்து நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். 2 வருடங்கள் முன்பு இந்தியா எப்படி இருந்தது என்பது உங்களுக்கு தெரியும். டிவியை ஆன் செய்தோமெனில், அன்றைக்கு புதிதாக ஒரு ஊழல் வெளியே வரும். மிகப்பெரிய ஊழல்கள், ஒவ்வொரு நாளும் வெளிவந்ததை பார்த்து நாட்டு மக்கள் நம்பிக்கையை இழந்து விரக்தியின் உச்சிக்கு சென்றிருந்தனர்.

நாட்டிலுள்ள குழந்தைகளுக்கு எதிர்காலம் இருக்காதோ என்ற ஏக்கம் மக்களுக்கு இருந்தது. அதை மீண்டும் நீங்கள் நினைத்து பாருங்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாட்டு மக்களிடம் நம்பிக்கை மீண்டும் உருவாகியுள்ளது. தாய்மார்கள், பெரியவர்கள் அனைவருக்கும், நாடு பற்றிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தேனீர் விற்ற ஒருவர் பிரதமராகிவிட்டாரே என்று சில பேருக்கு எரிச்சலாக உள்ளது. ஜனநாயக கட்டமைப்பையே அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஏழை மக்களின் பெயரில் அரசியல் நடத்துபவர்கள், வஞ்சிக்கப்பட்ட மக்கள் பெயரால் அரசியல் நடத்துவோருக்கு, ஏழை தாயின் மகன் இந்திய அரசாங்கத்தை நடத்துவோரை ஏற்க முடியவில்லை. ஏழை பெயரால் அரசாங்கம் நடத்தியவர்கள், ஏழை தாயின் மகன் கொடுக்கும் நிர்வாகத்தை ஏற்க முடியாமல் விழிக்கிறார்கள். கடந்த ஒன்றரை வருடத்தில், பாஜக அரசு மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு இல்லை.

இதனால், மோடியை என்ன செய்வது என்ற கவலை எதிர்தரப்புக்கு வந்துள்ளது. இவர்களின் எதிர்ப்புக்கு நடுவேயும், லோக்சபாவில் நம்மால் பணியாற்ற முடிகிறது. ஆனால், ஏழை, பிற்பட்ட சமூகத்தில் இருந்து வந்த இந்த மோடியை, ராஜ்யசபாவில் முடக்க முயலுகிறார்கள். திட்டங்களை நிறைவேற்றவிடாமல் ராஜ்யசபாவில் தடை போடுகிறார்கள். போனஸ் சட்டத்தை கூட தடுத்து வைத்து, ஏழை மக்கள் வயிற்றில் அடிக்கிறார்கள். தலித் மக்கள் கண்களில் மண்ணை தூவி பாஜகவுக்கு எதிராக சிலர் பிரச்சாரம் செய்துவருகிறார்.

தலித்துகள் மோடி பக்கம் போய்விடக்கூடாது என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. இட ஒதுக்கீட்டை மோடி ரத்து செய்துவிடுவார் என்று வதந்தி பரப்புகிறார்கள். தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேற வேண்டும். உடல் அழகு, நல்ல உடை, உணவு ஒருவனிடம் இருக்கலாம். ஆனால், உடலில் ஊனம் இருந்தால், அவன் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று கூற முடியாது.

அதேபோல தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் முன்னேறாமல் இருப்பது நாட்டை ஊனமாக காட்டும். அனைத்து தரப்பும் முன்னேறியதால்தான், நாடும் முன்னேறியதாக அர்த்தம். அதை பாஜக அரசு உறுதி செய்யும்.

அம்பேத்கர் பெயர் இந்த நாட்டில் இருக்கும்வரை, தலித்துகள் இட ஒதுக்கீட்டையும் யாரும் ரத்து செய்ய முடியாது. தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு தொடரும் என நான் உறுதியாக அறிவித்துக்கொள்கிறேன்.

இக்கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், பிரகாஷ் ஜவடேக்கர், தமிழிசை சவுந்திரராஜன், முரளிதரராவ், எல்.கணேசன், ஹெச்.ராஜா, மோகன்ராஜலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

tamil.oneindia.com

TAGS: