காஷ்மீரில் பனிச்சரிவு:பத்து இந்திய வீரர்களைக் காணவில்லை

காஷ்மீரில் உள்ள சியாச்சின் பனிச்சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய பத்து இந்திய வீரர்களைக் காணவில்லை என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

காணாமால் போனோரைத் தேடும் பணிகள் தீவிரம்

ராணுவமும் விமானப் படையின் தேடுதல் அணிகளும் மோப்ப நாய்களின் உதவியுடன் காணாமல் போனவர்களைத் தேடிவருவதாக, ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் எஸ்டி கோஸ்வாமி தெரிவித்திருக்கிறார்.

புதன்கிழமையன்று அதிகாலையில், சியாச்சினின் வடபகுதியில் இந்தப் பனிச்சரிவு ஏற்பட்ட அங்கிருந்த ராணுவ காவல்தளத்தை மூடியது.

உலகின் மிக உயரமான போர்க்களம் என்று வர்ணிக்கப்படும் சியாச்சினில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் படையினரும் தொடர்ந்து காவல் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்த மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் நான்கு இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். -BBC

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கியது “மெட்ராஸ் ரெஜிமெண்ட்”வீரர்கள்?: 10 பேரும் பலி என அச்சம்

ஸ்ரீநகர்: உலகின் உயரமான போர்முனையான இமயமலையின் சியாச்சின் பகுதியில் பனிச்சரிவில் சிக்கி மாயமான 10 பேரும் தமிழகம் உட்பட தென்மாநில வீரர்களை உள்ளடக்கிய “மெட்ராஸ் ரெஜிமெண்ட்” பிரிவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. பனிச்சரிவில் சிக்கிய 10 வீரர்களைப் பற்றி இதுவரை எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. ஆகையால் 10 பேருமே பனிச்சரிவில் சிக்கி பலியாகி இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

இமயமலையின் சியாச்சின் சிகரப் பகுதியில் 1984ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தினர் முகாமிட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது சுமார் 20,000 அடி உயரத்தில் உள்ள பகுதி. இங்கு பகலிலேயே மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் உறைபனி வெப்பநிலை இருக்கும். இவ்வளவு மோசமான வானிலை உள்ள போதும் பாகிஸ்தான் ஆக்கிரமிக்கக் கூடும் என்ற அச்சத்தால் அங்கு இந்திய ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் ராணுவ வீரர்களின் பங்கர் ஒன்றின் மீது பனிப்பாறை குன்று அப்படியே திடீரென சரிந்து விழுந்து மூடியது. இந்த பங்கரில் ஒரு அதிகாரி மற்றும் 9 ராணுவ வீரர்கள் இருந்தனர். இந்தியா- பாகிஸ்தான் – சீனா எல்லைகள் சந்திக்கும் இடத்தின் வட பகுதியில் இத்துயர சம்பவம் நிகழ்ந்தது.

இதனைத் தொடர்ந்து ராணுவம் மற்றும் விமானப்படையினர் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நேரம் செல்ல செல்ல மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உறைபனி வெப்பநிலை போனது… இதனால் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து அவர்களால் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் இன்றும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பனிச்சரிவில் சிக்கிய 10 பேரும் தமிழகம் உட்பட தென்மாநிலங்களின் வீரர்களைக் கொண்ட மெட்ராஸ் ரெஜிமெண்ட் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. {video2} இவ்வளவு மோசமான பனிச்சரிவில் சிக்கிய 10 பேரும் இன்னமும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு; ஆகையால் 10 ராணுவ வீரர்களுமே பலியாகி இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கின்றன ராணுவ வட்டாரங்கள்.

tamil.oneindia.com

TAGS: