குறைந்த விலையில் நாப்கின் தயாரித்த சாதனையாளர் முருகானந்தத்தை பாராட்டிய அகிலேஷ் யாதவ்

murugananthamகோவை: குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் அருணாச்சலம் முருகானந்தத்தைப் பாராட்டி உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் கடிதம் எழுதியுள்ளார்.

கோவையைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் கடந்த 1962-ல் பிறந்த அருணாச்சலம், தனது ஒரே கண்டுபிடிப்பினால் இன்று உலக அளவில் பிரபலம். இவர் தனது 14 வயதில் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தி, நெசவுத் தொழிலில் இறங்கினார். இன்று ஜெயஸ்ரீ தொழிற்சாலை என்ற பெயரில் தொழில் செய்து வருகிறார். ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் இருந்து வந்த முருகானந்தம் 10ம் வகுப்புக்கு மேல் படிக்க வசதியில்லை.

இந்நிலையில் அவர் குறைந்த விலையில் தரமான நாப்கினை தயாரிக்க வேண்டும் என முடி செய்துள்ளார். இதற்காக தனது வாழ்க்கையில் 12 ஆண்டுகள் செலவு செய்த அவர், இறுதியில் அதில் வெற்றி பெற்றார். முருகானந்தத்தின் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் நாப்கின் சுத்தத்திலும் சுகாதாரத்திலும் பன்னாட்டு நிறுவனத் தயாரிப்புகளுக்கு சற்றும் குறையவில்லை. தனது கண்டுபிடிப்புக்கான காப்புரிமை வாங்கவும் அவர் முயற்சிக்கவில்லை. அவரது ஒரு பீஸ் நாப்கின் ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய்தான்.

தனது தயாரிப்பால் ஏழை பெண்கள் பயன்பட வேண்டுமென்பதற்காக மகளிர் அமைப்புகள், பள்ளிகளில் மூலப் பொருட்கள் வழங்கி நாப்கின் தயாரிக்க பயிற்சி அளிக்கத் தொடங்கினார். இன்று உலகின் 21 நாடுகளில் முருகானந்தம் கண்டுபிடித்த 2500 இயந்திரங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. சுமார் ஒரு கோடி பெண்கள், இந்த எளிய விலை நாப்கின்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இவரது முயற்சியை பாராட்டி, கடந்த 2014ம் ஆண்டு ‘டைம்’ இதழ் உலகின் சக்தி வாய்ந்த 100 மனிதர்களில் ஒருவராக முருகானந்தத்தை தேர்வு செய்தது. இவர் தயாரித்த குறைந்த விலையில் பெண்களுக்கான நாப்கின் தயாரிக்கும் இயந்திரம் இந்தியா முழுவதும் பல்வேறு தொழிற்சாலைகளில் தற்போது நிறுவப்பட்டுள்ளது. இது மிகவும் பயனுள்ள வகையில் உள்ளதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

முருகானந்தத்தின் பணியைப் பாராட்டி மத்திய அரசு, இவருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்திலும் இந்த நாப்கின் தயாரிக்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிலையில், முருகானந்தத்தைப் பாராட்டி தனிப்பட்ட முறையில் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

அதில், மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள அகிலேஷ், கிராமப் புறங்களில் வாழும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் சுத்தத்துடன் இருப்பதற்காக நாப்கின்களை குறைந்த விலையில் தயாரிக்கும் முருகானந்தத்தின் பணியைப் பாராட்டி உள்ளார்.

tamil.oneindia.com

TAGS: