காதலர் தினத்தில் நாய்கள் முத்தமிடும் போராட்டம்; ‘ஆணாதிக்க சிந்தனை’

dog_kissஉலகின் பல பாகங்களிலும் பிப்ரவரி 14-ம் திகதி கொண்டாடப்படுகின்ற காதலர் தினம் இந்தியாவிலும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டுவருகின்றது.

நாட்டின் பல பாகங்களிலும் இன்று இந்த தினத்தில் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் ஆதரவான கொண்டாட்டங்களும் நடந்துள்ளன.

சென்னையில் மெரினா கடற்கரையில் காதலர் தினக் கொண்டாட்டங்களை ஆதரித்து திராவிடர் கழகத்தினர் நிகழ்வுகளை நடத்தியிருந்தனர். முத்தங்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்வுகளும் இங்கு நடந்தன.

இதுபோன்ற ஆதரவு நிகழ்வுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றன.

‘கலாசார சீர்கேடு’

இதனிடையே, காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டங்களை இந்து அமைப்புக்கள் நடத்தின.

தமிழகத்தின் சில பகுதிகளில் நாயுக்கும் ஆட்டுக்கும் திருமணம் செய்யும் போராட்டம், நாயும் நாயும் முத்தமிட்டுக்கொள்ளும் போராட்டம் போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

சென்னையில் சூளையில் ’30 நாய்கள் முத்தமிடும்’ கண்டனப் போராட்டத்தை பாரத் இந்து முன்னணி என்ற அமைப்பு நடத்தியிருந்தது.

காதலர் தின கொண்டாட்டங்கள் மூலம் இந்து மதத்தின் கலாச்சாரம் பாதிக்கப்படுவதாக அந்த அமைப்பின் தலைவர் பிரபு பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

‘தனிநபர் உரிமைகளில் தலையீடு’

உண்மையான காதலில் ஈடுபடுபவர்கள் பொது இடங்களில் ஆபாசமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

ஆனால், இரு தனிநபர்களின் உரிமையில் தலையிடுவது அநாகரீகமான செயல் என்று திராவிடர் கழகத்தின் பேச்சாளர் வழக்கறிஞர் அருள்மொழி கூறினார்.

மத அடிப்படைவாதிகளே காதலர் தினத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

‘பெண்கள் பொதுவெளிக்கு வரக்கூடாது என்ற ஆணாதிக்க சிந்தனை கொண்ட மத அடிப்படை வாதிகளே இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்’ என்றார் அருள்மொழி. -BBC

TAGS: