சென்னை, பிப். 15– அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 10–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலி பணி இடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து போராடி வருகின்றனர்.
சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமாக அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் அரசு துறை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. 12–ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு சுமார் 60 ஆயிரம் பேர் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக இருந்ததால் அரசு ஊழியர்கள் அனைத்து மாவட்டங்களிலும் எழுச்சி கூட்டங்களை நடத்தினார்கள்.
இந்த நிலையில் அரசு ஊழியர் சங்க போராட்டத்திற்கு ஆசிரியர் கூட்டணி ஆதரவு அளித்தது. இன்று (திங்கட்கிழமை) முதல் ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அந்த சங்கத்தை சேர்ந்த மோசஸ் அறிவித்து இருந்தார். அரசு ஊழியர்களின் போராட்டம் இன்று மேலும் தீவிரமாகிறது.
மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று அரசு ஊழியர் சங்கத்தினர் மாநில தலைவர் இரா.தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே அரசு ஊழியர்கள் திரண்டனர். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 300–க்கும் மேற்பட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
விருந்தினர் மாளிகையை முற்றுகையிட சென்ற அவர்களை போலீசார் தடுத்து மறித்தனர். இதனால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.
போராட்டம் குறித்து புதிய தலைவர் இரா.தமிழ் செல்வி கூறியதாவது:–
அரசு ஊழியர்கள் போராட்டத்தில் நீதித்துறை, ரேஷன் கடை ஊழியர்களும் இன்று பங்கேற்கிறார்கள். எங்களின் முக்கிய 4 கோரிக்கைகளை முதல்வர் அறிவித்து விட்டால் முக்கிய பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
இனி பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை. பட்ஜெட் கூட்டத் தொடரிலோ அல்லது முதல்வரின் பிறந்தநாள் அறிவிப்பாகவோ நல்ல செய்தி வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
நிதி இல்லை என்பது போன்ற நழுவலான அறிவிப்பு வரும் பட்சத்தில் எங்களது போராட்டம் மேலும் தீவிரமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு ஊழியர்களின் தொடர் சேலை நிறுத்த போராட்டத்தால் பல்வேறு துறைகளின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, வணிக வரித்துறை, வேலை வாய்ப்பு துறை, தொழிற் பயிற்சி துறை போன்றவற்றில் ஊழியர்கள் வேலைக்கு வராததால் துறைரீதியான பணிகளும், மக்கள் பணிகளும் முடங்கின.
-http://www.maalaimalar.com