பெங்களூர்: பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள விப்ஜியார் பள்ளியில் இருந்து பிடிக்கப்பட்ட சிறுத்தை பன்னர்கட்டா விலங்கியல் பூங்காவில் கூண்டில் இருந்து தப்பியோடியுள்ளது.
பெங்களூர் புறநநகர் பகுதியான ஒயிட்பீல்டு அருகே உள்ள மாரதஹள்ளியில் இருக்கும் விப்ஜியார் பள்ளிக்குள் கடந்த வாரம் சிறுத்தை ஒன்று புகுந்தது. இதையடுத்து வனத்துறையினர் வந்து 12 மணிநேரம் போராடி சிறுத்தையை பிடித்தனர்.
சிறுத்தையை பிடிக்கையில் 3 பேர் காயம் அடைந்தனர். பள்ளியில் பிடிக்கப்பட்ட சிறுத்தை தெற்கு பெங்களூரில் உள்ள பன்னர்கட்டா விலங்கியல் பூங்காவில் விடப்பட்டது. பூங்காவில் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுத்தை தற்போது தப்பியோடியுள்ளது. உணவு அளிக்க கூண்டை திறந்தபோது அது தப்பியோடியுள்ளது.
சிறுத்தை விலங்கியல் பூங்கா பகுதியில் தான் இருக்கும், அதனால் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய சிறுத்தைக்கு ஒரு கண்ணில் பார்வை பிரச்சனை உள்ளது.
மேலும் பல் ஒன்றும் உடைந்துள்ளது. அந்த சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அதை பிடித்துவிடுவோம் என்று வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.