சாதி வெறி பிடித்த நாட்டில் இருக்க விரும்பவில்லை! சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பேட்டி

highcourt_judge_001சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனிடம் வழக்கு விசாரணைகள் எதையும் ஒப்படைக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பொறுப்பு வகித்து வரும் சி.எஸ்.கர்ணன் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.

இதையடுத்து இன்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிறப்பித்த பணியிட மாறுதல் உத்தரவை நீதிபதி கர்ணனே தடை செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பணியிட மாற்றத்திற்காக காரணம் கேட்டு, உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி 29-ம் திகதிக்குள் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி கர்ணனின் இந்த உத்தரவை மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து நீதிபதி கேஹர் பிறப்பித்த எழுத்துபூர்வ உத்தரவில், கர்ணன் தனது பணியிட மாற்ற உத்தரவைப் பெற்றதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதி கர்ணனுக்கு எந்த வித வழக்கு விசாரணைகளையும் வழங்க வேண்டாம் என்பது நியாயபூர்வமாகவும், சரியானதாகவும் இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் கர்ணண் தரப்பில் ஆஜராகி வாதாடலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னதாக கடந்த பிப்ரவரி 10-ம் திகதி, நீதிபதி கர்ணன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் சாதிரீதியாக பாகுபாடு பாராட்டுகிறார் என்று குற்றஞ்சாட்டி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல், தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமியின் கவர்னர்கள் வாரியத்திலிருந்து நீதிபதி கர்ணன் பெயரை நீக்கினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே கர்ணன், சாதிப்பாகுபாடு புகாரை எழுப்பியுள்ளார்.

மேலும் பட்டியலில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பிரதிநிதித்துவம் இல்லை என்பதையும் கர்ணன் சுட்டிக்காட்டினார்.

எனவே, சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர்கள் இதில் உச்ச நீதிமன்ற தலையீடு கோரி வெள்ளிக் கிழமையன்று அவசர கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

இதனையடுத்து பிப்ரவரி 12-ம் திகதி கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு கர்ணன் மாற்றப்பட்டதற்கான பணியிட மாற்ற உத்தரவை அவர் பெற்றதாக கூறப்படுகிறது.

இன்று பிற்பகல் பத்திரிகையாளர்களை சந்தித்த நீதிபதி கர்ணன், தன் மீதான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இங்கே ஆதிக்க சாதியினர் அனைத்துத் துறையினிலும் அமர்ந்து கொண்டு சாதிய ஆட்சியை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா சாதிவெறி பிடித்த நாடாக மாறிக் கொண்டு வருகிறது. இந்த சாதி வெறி பிடித்த நாட்டில் நான் இருக்க விரும்பவில்லை!” என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-http://www.newindianews.com

TAGS: