இந்தியாவிலிருந்து ரூ.34 லட்சம் கோடி கருப்புப் பணம் வெளியேறியதா? எஸ்.ஐ.டி. விசாரணை

moneyமுந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ரூ.34 லட்சம் கோடி கருப்புப் பணம் அனுப்பப்பட்டதா என்று சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

“2004 முதல் 2013′ வரையிலான காலகட்டத்தில் வளரும் நாடுகளிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட கருப்புப் பணம்’ என்ற தலைப்பிலான அறிக்கையை அமெரிக்காவின் ஒருங்கிணைந்த சர்வதேச நிதி அமைப்பு அண்மையில் வெளியிட்டது.

அதில், இந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் கோடி வீதம் 10 ஆண்டுகளில் ரூ.34 லட்சம் கோடி கருப்புப் பணம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் கருப்புப் பணம் குறித்து விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவானது சம்பந்தப்பட்ட அமைப்பிடமிருந்து இதுதொடர்பான விவரங்களைப் பெற்றது. அந்த விவரங்களை இந்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு அனுப்பியுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவானது, உண்மையிலேயே ரூ.34 லட்சம் கோடி நாட்டிலிருந்து வெளியேறியதா, இல்லையா என விளக்கம் கோரியுள்ளது என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-http://www.dinamani.com

TAGS: