அரசு ஊழியர் போராட்டம் தீவிரமடைகிறது… லட்சக்கணக்கானோர் சிறை நிரப்ப திட்டம்

govt-staffs-protestசென்னை: தமிழகம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ள அரசு ஊழியர்கள், 500 இடங்களில் மறியலிலும் ஈடுபடவுள்ளனர். தினசரி 2 லட்சம் ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதாக முடிவு செய்துள்ளனர். கடந்த ஒருவாரகாலமாக நடைபெற்று வரும் அரசு ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக பொதுமக்கள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கடந்த 10ம் தேதியில் இருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய்கிழமையன்று 7வது நாளாக போராட்டம் நீடித்தது. அனைத்து மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் போராட்டம்

சென்னை சேப்பாக்கம் அருகே எழிலகம் வளாகத்தில் செவ்வாய்கிழமையன்று திரண்ட அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். வளாகத்துக்கு உள்ளேயே பேரணியும் சென்றனர். நேற்று தொடங்கிய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து ஏதாவது அறிவிப்புகள் வெளிவரும் என்று அவர்கள் காத்திருந்தனர்.

ஏமாற்றிய பட்ஜெட் உரை

பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வராததை தொடர்ந்து அவர்கள் எழிலகம் வளாகத்தை விட்டு வெளியேறி பேரணியாக தலைமைச் செயலகத்தை முற்றுகையிட புறப்பட்டனர். ஆனால் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் எழிலகத்தின் அனைத்து வாயில்களையும் அடைத்து, தடுப்பு ஏற்படுத்தி, அரசு ஊழியர்கள் வெளியேறாமல் சூழ்ந்து நின்று கொண்டனர்.

தள்ளுமுள்ளு

போலீஸாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தடுப்புகளை அகற்றிக் கொண்டு அரசு ஊழியர்கள் வெளியேறினர். அவர்களை போலீஸார் தடுக்க முயல, இரு தரப்புக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அரசு ஊழியர்கள் சிலர் மயங்கினர். சிலர் காயம் அடைந்தனர். அரசு ஊழியர்கள் கைது எழிழகம் வளாகத்தை விட்டு வெளியேறிய அரசு ஊழியர்கள் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் காமராஜர் சாலை முழுவதும் சுமார் 2 மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். நூற்றுக் கணக்கானவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

தமிழகம் முழுவதும் போராட்டம்

தமிழகம் முழுவதும் கடந்த ஓருவார காலமாக நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக பணிகள் முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளன. பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வர, அரசு ஆர்வம் காட்டவில்லை. எனவே, போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த உள்ளோம். இன்று முதல், மாவட்டங்கள் தோறும் தினமும் மறியல் நடக்கும் என்று அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

போராட்டக்குழு

போராட்டத்தை இன்றுமுதல் இன்னும் தீவிரப்படுத்த இருக்கிறோம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஆர்.தமிழ்செல்வி தெரிவித்துள்ளார். பட்டதாரி மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் உட்பட பல சங்கத்தினருடன் இணைந்து புதிய போராட்டக் குழுவை உருவாக்கி இருக்கிறோம். இதன் மூலம் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

500 இடங்களில் மறியல்

நீதித்துறை ஊழியர் சங்கத்தினர், டாக்டர்கள் சங்கத்தினர், செவிலியர் சங்கத்தினர் உட்பட அரசு சார்ந்த பல முக்கிய சங்கத்தினர் எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று முதல் அவர்களும் எங்களுடன் இணைந்து போராட இருக்கின்றனர். தாலுகா வாரியாக தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்செல்வி தெரிவித்தார்.

tamil.oneindia.com

TAGS: