நீதிபதி கர்ணன் விவகாரமும், நீதி தேவனின் கலைய மறுக்கும் மயக்கமும்- ஆர்.மணி

justice-karnanகடந்த ஐந்தாண்டுகளாகவே கடும் சர்ச்சைகளுக்கு காரண கர்த்தாவாக இருந்து கொண்டிருக்கும் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் தற்போது மீண்டும் தேசீய நாளிதழ்களின் முதல் பக்க செய்தியாகிருக்கிறார். இந்த முறை நீதிபதி கர்ணன் கண்டிப்பாகவே பெரியதோர் செய்தி நாயகனாயிகிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். விவகாரம் இதுதான்; சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கவுலுக்கு எதிராக மீண்டும் தேசீய தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்துக்கு நீதிபதி கர்ணன் கடிதம் எழுதியிருந்தார்.

இதில் தான் ஒரு தலித் என்பதால் தான் தன்னை நீதிபதி கவுல் ஒதுக்கிறாரென்று குற்றஞ் சாட்டியிருந்தார். இதே குற்றச் சாட்டை கர்ணன் ஏற்கனவே நீதிபதி கவுலுக்கு எதிராக சுமத்தியதும், அப்போதும் சென்னை உயர்நீதி மன்றப் பதிவாளரே உச்ச நீதி மன்றத்துக்கு விஷயத்தை எடுத்துச் சென்றதும் பழைய கதை. கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களில் தனி நீதிபதியாக தான் பிறப்பித்த உத்திரவுக்கு உயர்நீதி மன்றத்தின் இரண்டு நீதிபதிகள் தடை விதித்த போது அந்தத் தடை செல்லாதென்று கூறி தலைமை நீதிபதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்திரவு பிறப்பித்தவர்தான்’ நீதிபதி கர்ணன்.

பின்னர் உச்ச நீதிமன்றத்திற்கு விவகாரம் சென்னை உயர்நீதி மன்றத்தால் கொண்டு செல்லப் பட்டு 2015 மே 11 ம் தேதி நீதிபதி கர்ண னின் உத்திரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமன விவகார வழக்கில் தலையிட வேண்டாமென்றும் கூறியது. அந்த நாள் சொத்து குவிப்பு ஊழல் வழக்கிலிருந்து ஜெயலலிதா வை ‘கணித மேதையும்’ கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதியுமான குமாரசாமி விடுதலை செய்த நாள்.

ஆகவே அந்த செய்தி உருவாக்கிய சுனாமியில் உச்ச நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு ஊடக வெளியில் மூழ்கிப் போனது. பின்னர் 2015 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் நீதிபதி கர்ணனுக்கு எதிராக உச்ச நீதி மன்றம் ஆணை பிறப்பித்து அவரது செயற் பாடுகளை கட்டுப் படுத்த எத்தனித்தது. இந்த முறையும் வழக்கம் போலவே தன்னை தலித் என்பதால் தலைமை நீதிபதி கவுல் உதாசனப் படுத்துவதாக தேசீய தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்துக்கு நீதிபதி கர்ணன் கடிதம் எழுதியிருந்தார்.

இதனை எதிர்த்து மீண்டும் உச்ச நீதிமன்றத்துக்கு படையெடுத்தது சென்னை உயர் நீதி மன்றம். இந்த முறை விஷயம் கையை மீறிப் போய் கொண்டிருப்பதால் நீதிபதி கர்ணனை கல்கத்தா உயர்நீதி மன்றத்துக்கு மாற்ற தான் பரிந்துரைப்பதாக இந்திய தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் நீதிபதி கர்ண னுக்கு இம்மாதம் 12 ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இதன் பிறகுதான் விவகாரம் பற்றியெறிய ஆரம்பித்தது. தன்னை கல்கத்தா உயர்நீதி மன்றத்துக்கு மாற்றம் செய்யும் பரிந்துரைக்கு பிப்ரவரி 15 ம் தேதி நீதிபதி கர்ணன் இடைக் காலத் தடை விதித்தார். ஆம். தனக்கு எதிரான உத்திரவுக்கு தானே தடை விதித்துக் கொண்டார்.

மேலும் தன்னுடைய செயலுக்கு தலைமை நீதிபதி தாக்கூர் அவரது பிரதிநிதி மூலம் வரும் ஏப்ரல் 29 ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தன்னுடைய உத்திரவில் குறிப்பிட்டிருந்தார். இதில் ஆடிப் போன சென்னை உயர்நீதி மன்றம், வழக்கம் போல தன்னுடைய பதிவாளர் மூலம் மீண்டும் உச்ச நீதிமன்றத்துக்கு போனது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜே.எஸ. கேஹர், ஆர். பானுமதி அடங்கிய பெஞ்ச் நீதிபதி கர்ணன் பிப்ரவரி 12 ம் தேதிக்கு பின்னர் பிறப்பித்த அனைத்து உத்திரவுகளுக்கும் தடை விதித்தது. மேலும் இனி மேல் நீதிபதி கர்ணனுக்கு பணிகள் ஒதுக்குவது சம்மந்தமாக தலைமை நீதிபதி கவுல் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறி விட்டது.

இதற்கடுத்து நீதிபதி கர்ணன் சொல்லியது வரலாற்று முக்கியமானது. ‘எனக்கெதிராக உத்திரவு பிறப்பித்த இந்த இரண்டு உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்கு எதிராக தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்திரவு போடப் கிறேன். நான் தலித் என்பதால்தான் இந்தக் கொடுமைகள் நடக்கின்றன. இந்தியாவில் பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன்.

ஜாதி வேற்றுமைகள் இல்லாத நாட்டிற்கு குடி பெயர்ந்து செல்ல நான் தயங்க மாட்டேன்’ என்றும் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறினார். சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தின் வாசலில் நின்று கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நீதிபதி சுமார் 20 நீதிபதிகள் மீதும் சராமாரியாக குற்றச் சாட்டுக்களை சுமத்தினார். இவற்றை எழுத்தில் வடிப்பது இயலாத காரியம், காரணம் ஒரு குற்றச் சாட்டுக்குக் கூட ஆதாரம் கிடையாது.

இந்திய நீதித் துறை வரலாற்றில் ஒரு நீதிபதி நட்ட நடுத்தெருவில் நின்று கொண்டு செய்தியாளர்களிடம், அதுவும் நீதிமன்றத்தின் உள் விவகாரங்களை பேசியது இதுவே முதன் முறை. பின்னர் பிப்ரவரி 16 ம் தேதி டில்லியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூரை சந்தித்துப் பேசினார் நீதிபதி கர்ணன். இதன் பிறகு டில்லியில் ராம் விலாஸ் பாஸ்வான், மாயாவதி உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்துப் பேச நீதிபதி கர்ணன் திட்டமிட்டுள்ளார். இந்த விவகாரம், இந்திய நீதித் துறைக்கு பெரியதோர் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

நீதித்துறைக்கு எதிராக மற்றவர்கள் எவராவது வாயைத் திறந்தாலும், சொற்ப அளவில் விமர்சனங்களை முன் வைத்தாலும் கூட அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை நீதிமன்றங்கள் போட்டு விடுகின்றன. சம்மந்தப் பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதிகள் முன்பு கை கட்டி, வாய் பொத்தி பதில் சொல்ல வேண்டும். அதில் திருப்தியடைந்தால் நீதிபதிகள் சம்மந்தப் பட்டவரை அவர்களது மன்னிப்பை ஏற்றுக் கொண்டு, எச்சரித்து விட்டு விடலாம் ….அல்லது ஆறு மாதங்கள் வரைக்கும் சிறைக்கு அனுப்பி வைக்கலாம்.

சமீபத்தில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து சொன்ன கருத்து, ‘ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்கள் வரையில் ஊழல் கரைபடியாமல் இருக்கும் நீதிபதிகள் கடைசி ஆறு மாதங்களில் தடம் மாறி விடுகிறார்கள்’ என்பது. இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி கவுலும் பங்கேற்றார். இந்தக் கருத்துக்காக, சினிமா ஃபைனான்சியர் ஒருவர் வைரமுத்து மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி சதீஷ் அக்னிஹோத்திரி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு அனுமதித்தது. வைரமுத்துவுக்கும் சம்மன் அனுப்பபட்டது. வைரமுத்துவும் நீதிமன்றத்தில் ஆஜரானார். பிரிட்டீஷ் ஆட்சியில் கொண்டு வந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஷரத்துக்களை தற்போது இங்கிலாந்தே நீக்கி விட்ட நிலையில் இந்தியாவில் அதனை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறோம்.

இதனை சொல்லுவதற்கு காரணம் நீதித்துறைக்கு வெளியிலிருந்து தன் மீது வரும் விமர்சனங்களிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சட்டத்தை கொண்டிருக்கும் நீதிமன்றங்கள், உள்ளிருந்து வரும் விமர்சனங்களிலிருந்தும், தாக்குதல்களில் இருந்தும் தன்னை காத்துக் கொள்ளும் வல்லமை இல்லாமல் இருப்பதுதான். நீதிபதி கர்ணன் நடவடிக்கைகளுக்கு எதிராக மூன்று முறை கடந்த ஓராண்டில் சென்னை உயர்நீதி மன்றம் உச்ச .நீதி மன்றத்தின் கதவுகளைத் தட்டியிருக்கிறது. மூன்று முறையும் சென்னை உயர்நீதி மன்றத்தின் பதிவாளர் ஒரு மனுதாரராக உச்ச நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி யின் முன் வழக்குத் தாக்கல் செய்திருக்கிறார். இந்த விவகாரம் மிகவும் சிக்கலானதென்றே வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.

அதாவது தவறிழைக்கும் உயர்நீதி மன்ற அல்லது உச்ச நீதி மன்ற நீதிபதி மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது ….உயர்நீதி மன்றத்திலோ அல்லது உச்ச நீதி மன்றத்திலோ ஒருவர் நீதிபதியாக அமர்ந்து விட்டால் அவரை பதவியிலிருந்து அகற்றுவதென்பது மிகவும் கடினமான, கொச்சையாகச் சொன்னால் குதிரை கொம்பு போன்ற விவகாரம் தான்.

நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் தான் குற்றச் சாட்டுக்கு ஆளான ஒரு நீதிபதியை பதவி நீக்கம் அதாவது ‘இம்பீச்மெண்ட்’ செய்ய முடியும்.

இதுவரையில் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதி மன்றத்தின் ஒரு நீதிபதி கூட ‘இம்பீச்மெண்ட்’ செய்யப் பட்டதில்லை. 1993 ம் ஆண்டு மே 10 ம் தேதி அப்போதய உச்ச நீதி மன்ற நீதிபதி, தமிழ் நாட்டைச் வி.ராமசாமி மீது ‘இம்பீச்மெண்ட்’ கொண்டு வரப்பட்டது. அவர் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த போது தன்னுடைய பங்களாவில் அதிகம் பணம் செலவழித்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டார் என்பது குற்றச் சாட்டு. இதனை சிஏஜி அறிக்கையும் உறுதி செய்திருந்ததால் மக்களவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 195 எதிர் கட்சி உறுப்பினர்கள் இதனை ஆதரித்தனர்.

ஆனால் 205 காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்ததால் ‘இம்பீச்மெண்ட்’ முயற்சி தோற்றது. பின்னர் கல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதி சவுமித்திரா சென் மீது ஆகஸ்ட் 18, 2011 ல் மாநிலங்களவையில் ‘இம்பீச்மெண்ட்’ மசோதா வெற்றிப் பெற்றது. ஆனால் மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப் படுவதற்கு முன்பே அவர் ராஜினாமா செய்து விட்டார். ஆனால் அரசியல் சாசனப் படி அவர் ராஜினாமா செய்தாலும் கூட அவரை, மக்களைவையிலும் மசோதா நிறைவேற்றி ‘இம்பீச்மெண்ட்’ செய்திருக்க முடியும்.

ஆனால் நாடாளுமன்றம் விவகாரத்தை அத்துடன் விட்டு விட்டது. இந்த இரண்டு நிகழ்வுகளைத் தவிர்த்து கடந்த காலங்களில் உயர்நீதி மற்ற மற்றும் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் எவர் மீதும் ‘இம்பீச்மெண்ட்’ முயற்சி மேற்கொள்ளப் பட்டதில்லை. நீதிபதி கர்ணன் விவகாரத்தை சென்னை உயர்நீதி மன்றமே உச்ச நீதி மன்றத்துக்கு கொண்டு செல்லாமல் கையாண்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து சில சட்ட நிபுனர்களிடம் நிலவுகிறது. ‘இந்த விவகாரத்தில் ஒரு வித அவசர கதியில் சென்னை உயர்நீதி மன்றம் செயற்பட்டிருக்கிறது என்று கூட சொல்லுவேன், ஆங்கிலத்தில் சொன்னால் “knee jerk reaction” என்று பொருள் கொள்ளலாம். அரசியல் சாசனத்தின் படி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கே ஒரு நீதிபதிக்கு பணிகள் கொடுக்காமல் வைத்திருக்கவும் அதிகாரமுண்டு.

குறிப்பிட்ட நீதிபதியை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு இந்திய தலைமை நீதிபதி மூலமாக குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யவும் அனுமதி உண்டு. ஏனெனில் ஒரு நீதிபதியை பணியில் அமர்த்துவதும், வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான அதிகாரங் கொண்டவர் குடியரசுத் தலைவர்தான் … ஆகவே இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதி மன்றம் இப்படியும் கையாண்டிருக்கலாம் என்று கருதுகிறேன்’ என்று ஒன் இந்தியா விடம் கூறினார் மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன். ‘இந்திய அரசியல் சாசனத்தின் 124 ஷரத்து உப பிரிவு (4) மற்றும் (5) ம் கீழ் ஒரு நீதிபதி குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப் படக்கூடிய நடவடிக்கையில் ஈடுபட்டாரென்று வந்தால் அவர் மீது உரிய முறையில் விசாரணைகளை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கான உரிய சட்டத்தை நாடாளுமன்றம் இயற்ற வேண்டும். இதனை இதுவரையில் இந்திய நாடாளுமன்றம் இயற்றவில்லை’ என்று மேலும் கூறும் விஜயன் நீதிபதி கர்ணன் நடந்து கொண்ட முறை ‘கேலிக் கூத்தின் உச்ச கட்டம்’ என்று விவரிக்கிறார். இனிமேல் என்ன நடக்கும்? நீதிபதி கர்ணன் கல்கத்தா உயர் நீதி மன்றத்துக்கு போவாரா? அல்லது சென்னை உயர்நீதி மன்றத்திலேயே மீண்டும் பணிக்கு வருவாரா?’ ‘எதுவும் நடக்கலாம். இந்த விவகாரத்தை அப்படியே ஆறப் போட்டு விட்டு, ஒரு விசாரணைக்கு உத்திரவிடுகிறோம் என்று சொல்லி விட்டு உச்ச நீதி மன்றம் நிலைமையை சமாளிக்கலாம். நீதிபதி கர்ணன் கல்கத்தா உயர்நீதி மன்றத்துக்குப் போகாமலும், அதே நேரத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவருக்கு பணிகள் ஒதுக்கப் படாமலும் இப்போதய நிலைமை தொடரலாம்.

தன்னுடைய உத்திரவை உச்ச நீதி மன்றமே திரும்ப பெற்றுக் கொண்டு நீதிபதி கர்ண னை சென்னை உயர்நீதி மன்றத்திலேயே பணிகளை தொடர அனுமதிக்கலாம்’ என்று கூறுகிறார் விஜயன். அல்லது 2017 ஜூனில் ஓய்வு பெறவிருக்கும் நீதிபதி கர்ணன் கல்கத்தா உயர்நீதி மன்றத்துக்கும் பணிக்குப் போகலாம். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் மலை போல தேங்கிக் கிடக்கும் நிலைமையில்தான் இந்த கேலிக்கூத்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்பதுதான் முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியது. சென்னை உயர்நீதி மன்றத்தில் மொத்தம் அனுமதிக்கப் பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75. கர்ணனின் இட மாற்றத்திற்கு பிறகு இது 37 ஆகியிருக்கிறது. தவறு செய்யும் நீதிபதிகள் விவகாரத்தை எப்படி கையாளுவது என்கின்ற எளிதான சட்டங்களும், நடைமுறைகளும் இல்லாமல் இருப்பது சாமானிய மனிதனை மேலும் மேலும் துன்பத்தில் தள்ளிக் கொண்டிருக்கிறது.

இதற்கு சட்டங்களை இயற்றும் நாடாளுமன்றம்தான் பெரும் பொறுப்பென்றாலும், நீதித் துறையும் இதில் தன்னுடைய பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாதுதான். ஏனெனில் தற்போது இருக்கும் சட்டப் பிரிவுகளை வைத்தும் கூட இத்தகைய நிலைமையை நீதிமன்றங்கள் சமாளிக்க முடியும். நீதிபதி கர்ணன் விவகாரத்தில் அவர் ஒரு தலித் என்பதும் பிரச்சனையின் முக்கியமானதோர் பரிமாணம், இது இந்த விவகாரத்தை கையாண்டுக் கொண்டிருக்கும் சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு புதியதோர் அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. எப்படி பார்த்தாலும் இந்த தயக்கத்தை ஒரு விதமான மயக்க நிலை என்றும்தான் கூற வேண்டும். சாமானிய இந்தியனின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் நீதி தேவனின் மயக்கம் சொல்லொனா துயரங்களைத் தான் கொண்டு வரும். விழித்துக் கொள்ளுவார்களா சம்மந்தப் பட்ட நம்முடைய நீதிமான்களும், மத்திய அரசும் …….?

tamil.oneindia.com

TAGS: