தலைமறைவான டில்லி பல்கலை மாணவர்கள் கைதாவர்களா? சரணடைவார்களா?

studentsபுதுடில்லி: தேச துரோக குற்றச்சாட்டிற்கு உள்ளான உமர் காலித், ஆனந்த் பிரகாஷ் நாராயன் , அசுதோஷ் குமார், ராமா நாகா மற்றும் அனிர்பன் பட்டாச்சார்யா என்ற 5 மாணவர்கள் கைதாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தங்களை கைது செய்து கொள்ளலாம் என மாணவர்கள் கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் சரணடைய வேண்டும் என போலீசார் கூறியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் நடந்த விழாவில் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டதாக எழுந்த புகாரால் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் உமர் காலித், ஆனந்த் பிரகாஷ் நாராயன் , அசுதோஷ் குமார், ராமா நாகா மற்றும் அனிர்பன் பட்டாச்சார்யா என்ற 5 பேரை போலீசார் தேடி வந்தனர். அவர்கள் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை எனக்கூறிய அவர்கள்,தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது எனக்கூறி தலைமறைவானார்கள். அவர்கள் நேற்று இரவு பல்கலை வளாகத்திற்குள் வந்தனர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என கூறப்பட்டது. தொடர்ந்து போலீசார் பல்கலை வளாகம் வெளியே குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை சரணடைய வேண்டும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல்கலை நிர்வாகத்தினரிடம் டில்லி போலீஸ் அதிகாரிகள் கூறினர். ஆனால் மாணவர்கள் தரப்பில் தங்களை கைது செய்து கொள்ளலாம் என கூறினார். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

டில்லி போலீஸ் கமிஷனர் பாஸி கூறுகையில், தாங்கள் நிரபராதிகள் என்பதை மாணவர்கள் தான் நிருபிக்க வேண்டும். அவர்கள் விசாரணையில் கலந்து கொள்ள வேண்டும். தாங்கள் குற்றமற்றவர்கள் என்றால், அதற்கான ஆதாரத்தை மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனக்கூறினார்.

இதற்கிடையே, பல்கலை பேராசிரியர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் பல்கலை பதிவாளரை சந்தித்து பேசினார். அப்போது, ஜாதவ்பூர் பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, எடுக்கப்பட்ட முடிவுகள் போல் ஜே.என்.யு.,விலும் எடுக்கப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட கன்னையா குமாரை விடுதலை செய்ய வேண்டும். மாணவர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் கைவிடப்பட வேண்டும். போலீசார் விசாரிப்பதை தடுத்து நிறுத்தி, ஆசிரியர்கள் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து அவர்கள், பல்கலை., துணைவேந்தரை சந்தித்து பேசினர். அப்போது, பல்கலை வளாகத்திற்குள் போலீசார் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என துணைவேந்தர் உறுதியளித்தார்.

-http://www.dinamalar.com

TAGS: