பயங்கரவாதிகளுக்கு பாக்., உதவி; தளபதி தல்பீர் அதிரடி குற்றச்சாட்டு

dddபுதுடில்லி : ”லஷ்கர் – இ – தொய்பா, ஜெய்ஷ் – இ – முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு, பாகிஸ்தான் ராணுவம் நேரடியாக உதவி செய்து வருகிறது,” என, ராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங் சுஹாக் கூறினார்.

டில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், தளபதி தல்பீர் சிங் பேசியதாவது: ஜம்மு – காஷ்மீர் மாநிலம், பாம்போரில், சமீபத்தில், ஒரு கட்டடத்துக்குள், பதுங்கிய மூன்று பயங்கரவாதிகளை, 48 மணி நேரத்துக்கு மேல் போராடி, ராணுவம் சுட்டுக் கொன்றது. இதில், இரண்டு கேப்டன்கள் உட்பட, 4 வீரர்களை, நாம் இழந்துள்ளோம். இந்த பயங்கரவாதிகள், லஷ்கர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதுடன், பாகிஸ்தானிலிருந்து தான் வந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. தடை செய்யப்பட்டுள்ள, லஷ்கர், ஜெய்ஷ் – இ – முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு, பாகிஸ்தான் ராணுவம் நேரடியாக உதவி செய்து வருகிறது.

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, சமூக இணைய தளங்கள் மூலம், பயங்கர வாதத்தை பரப்புகிறது; இது, உலக பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக உள்ளது. அதனால், ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத அமைப்புகளை, இனி ஒரு பகுதியில் செயல்படும் அமைப்புகளாக கருத முடியாது. உலகின் எந்த பகுதியிலும், இவர்கள், நாச வேலையில் ஈடுபடுவர். இதை ஒடுக்க, உலக நாடுகள் ஓரணியில் திரண்டு, உளவு தகவல்களை பரிமாறி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.கருத்தரங்கில், பா.ஜ.,மூத்த தலைவர் எம்.ஜே.அக்பர் பேசுகை யில், ”பயங்கரவாதிகளின் சரணாலயமாக, பாகிஸ்தான் உள்ளது” என்றார்.

-http://www.dinamalar.com

TAGS: