ராஜீவ் கொலை சந்தேக நபரின் விடுதலை முயற்ச்சி தேர்தல் குண்டாக இருக்கலாம் !

rajiv_killers7_002இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தை காரணம் காட்டி அவர்களுக்கான தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.

மேலும் அவர்களை விடுதலை செய்வது பற்றி உரிய அரசு முடிவெடுக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தது.இதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி ஏற்கனவே இவ்வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, ரொபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சிறையில் இருந்து விடுவிப்பதாக தமிழக அரசு அறிவித்தது. ஆயுள் தண்டனை காலம் முடிந்த நிலையில் அவர்களை விடுதலை செய்வதாக தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கடந்த டிசம்பரில் வழக்கு விசாரணை முடிவில், ‘இந்த வழக்கில் உள்ளவர்களை விடுதலை செய்வது குறித்த அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. மத்திய அரசுக்குத்தான் உள்ளது’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இவ்விவகாரத்தில் 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு மற்றொரு முயற்சியை மேற்கொண்டு உள்ளது. இந்நிலையில், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிப்பது குறித்து கருத்துக் கேட்டு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், மத்திய உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி உள்ளிட்ட 7 பேர் 24 ஆண்டுகளாக சிறையில் இருப்பதாகவும், அவர்களை விடுப்பதில் மத்திய அரசு கருத்தை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்பாள் தெரிவித்துள்ளார். எனினும் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சார உத்தியே இதுவென அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

-http://www.athirvu.com

TAGS: