நெஞ்சு பொறுக்குதில்லையே…! – செந்தமிழ்

karunanithiதமிழக மக்கள் காத்துவரும் கள்ள மௌனம் இன்னும் எத்தனை எத்தனை உயிர்களை காவு வாங்கப்போகிறதோ…?

தமிழினத் துரோகி கருணாநிதியின் துரோகத்தை முன்னிலைப்படுத்தி தமது துரோகத்தையும் கையாலாகாத் தனத்தையும் மூடி மறைத்த தமிழ்த் தேசிய(!) வாதிகளின் பச்சைத் துரோகமும் ஏழு கோடி தமிழக மக்களின் கள்ள மௌனமும்தான் ஒன்டரை லட்சத்திற்கு மேற்பட்ட உறவுகள் கொன்றுகுவிக்கப்பட காரணமாகும்.

சொக்கத்தங்கம் சோனியாவுடன் கூட்டணி சேர்ந்து நூற்றாண்டு கண்டிராத இனப்படுகொலையை மனித மிருகம் ராசபக்சேவின் துணையுடன் நடத்தி முடிக்கும் துணிவையும் வாய்ப்பையும் கருணாநிதிக்கு கொடுத்தது தமிழக தமிழ்த் தேசிய சக்திகளின் கையாலாகத்தனமும் தமிழக மக்களின் கள்ள மௌனமும்தானே?

புலமெங்கும் வீதிகளை வீடாக்கி வீறுகொண்ட எம் புலம்பெயர் உறவுகளை போன்று தமிழகத்தில் உறுதிகுலையாத போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் கருணாநிதியால் தன் குடும்பத்தை காக்கும் இனவழிப்பு போரிற்கு துணைநின்றிருக்கத்தான் முடிந்திருக்குமா?

இனம் மொத்தமும் கொன்று புதைக்கப்பட்ட போது காக்கப்பட்ட கள்ள மௌனத்தை தமிழக மக்களும் தமிழ்த்தேசிய சக்திகளும் இன்றும் தொடர்வதன் மூலம் எமக்கு கிடைக்க வேண்டிய நீதியும் குழிதோண்டி புதைக்கப்படுள்ளது.

அன்றும் சரி இன்றும் சரி தமிழ்த் தேசிய சக்திகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் அனைத்தும் சடங்குமுறை போராட்டங்களாக இருப்பதே செயல் விளைவு எதனையும் ஏற்படுத்தாமைக்கு காரணமாகும்.

தத்தமது கட்சி மாநாடுகளிற்கு லட்சக்கணக்கில் தொண்டர்களை ஓரிடத்தில் திரளச்செய்யும் இவர்கள் இனம் காக்கும் போராட்டங்களில் ஓராயிரம் ஈராயிரங்களுடன் திருப்திப்பட்டு கொள்வதை வேறு எப்படி சொல்வது?

பல வேளைகளில் போராட்டத்தில் பங்குகொண்ட கட்சிகள், இயக்கங்கள், அமைப்புக்கள் என்பவற்றின் எண்ணிக்கையே நாற்பது ஐம்பதை தாண்டியிருக்கும் போதிலும் வெறும் முன்னூறு நானூறென்ற மிகப்பிரமாண்ட(!) எண்ணிக்கையிலானவர்கள் கூடிக்கலைவதன் சூட்சுமத்தை வேறு எப்படி சொல்வது?

அதிகார சுரண்டல் அதிகார அத்துமீறல்கள் அதிகார அடக்குமுறை என தினம் தினம் தமிழகத்தில் உள்ள ஏதிலிகள் முகாமில் வாழும் ஈழத்தமிழர் படும் இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல.

வழக்கமான செய்திகளாக கடந்து போய்விடும் ஈழத்தமிழ் ஏதிலிகளின் தற்கொலை மரணங்களின் பின்னால் உள்ள மர்மங்கள் குறித்து இவர்கள் யாராவது எண்ணியதுண்டா?

தமிழகத்தில் தற்கொலை செய்யும் ஒவ்வொரு ஈழத்தமிழ் பெண்ணின் மரணத்திற்கும் பாலியல் துன்புறுத்தல்களே பெரும்பான்மை காரணமாக இருந்துவருகிறது.

பாலியல் துன்புறுத்தலானது வேலியே பயிரை மேய்ந்த கதையாக அதிகாரத்திலுள்ளவர்களாலேயே ஏற்படுத்தப்படுகிறது. அதை மறைத்து முறைகேடான உறவு, குடும்பத் தகராறு என்பனவே தற்கொலைக்கு காரணமாக சோடிக்கப்பட்டு வழக்குகள் வலிந்து முடித்துவைக்கப்படுகிறது.

தமிழின விடுதலை குறித்து தமிழகத்தில் கோசம்போடும் எவராவது அவர்களது காலடியில் கிடக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகளை என்றாவது ஒருநாள் போய் பார்த்திருப்பார்களா…?

அவர்களின் துயரங்களை காது கொடுத்து கேட்டார்களா…? அவர்களின் தேவைகளை கேட்டார்களா…? உங்களுக்கு நாங்கள் இருக்கின்றோம் என்ற ஒற்றை வார்த்தையாவது கூறியிருப்பார்களா…?

இல்லை… இல்லை… இல்லை… அதன் உச்சம்தானே மதுரை உச்சப்பட்டி முகாமில் அரங்கேறிய துயரம்.

நாங்கள் சென்று பார்த்தால் அவர்களுக்குதான் பிரச்சினை என்று வெட்கமேயில்லாமல் கூறுவார்கள் இவர்கள்.

இவர்கள் பார்த்து பேசுவதால் ஏற்படும் பிரச்சினைகளையே தீர்த்துவைக்க முடியாத இவர்கள் தமிழீழ விடுதலை குறித்து வீராவேசமாக பேசுவதை கேட்கும் ஒவ்வொரு சந்தர்பதிலும் ‘கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானமேறி வைகுண்டம் போனானாம்’ என்ற முது மொழிதான் நினைவில் நிழலாடும்.

தெலுங்கர், கன்னடர், மலையாளி, பீகாரி, குஜராத்தி, பஞ்சாபி என பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் திபெத் மக்களும் தமிழகத்தில் சுகபோகமாக வாழ்ந்து வருகையில் ஈழத்தமிழர்கள் மட்டும் சட்டவிரோத குடியேறிகளாக முகாம்களில் அடைபட்டிருப்பது தமிழ்நாட்டின் அவமானம்.

நாங்களும் மனிதர்கள்தான். எங்களை சக மனிதர்களாக மதித்தாலே போதும் என்பதுதான் எம்மவர்களின் ஆதங்கம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

ம.செந்தமிழ்.
[email protected]

-http://www.puthinamnews.com

TAGS: