ஏழைகளுக்கு ஒரு நீதி? பணக்காரர்களுக்கு ஒரு நீதியா?

vijay_mal_001பெரிய தொழிலதிபர்களுக்கும் பிரபலங்களுக்கும், அரசியல் மற்றும் ஆதாய உள்நோக்கில் கருணைகாட்டும் வங்கி அதிகாரிகள், பொதுமக்களிடம் மட்டும் கறாராக நடப்பது ஏன்?

மல்லையாவோடு வங்கிகள் மல்லு

சமீபத்தில் சர்ச்சையில் சிக்கியிருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையா 9 ஆயிரம் கோடி கடனை பெற்றுக்கொண்டு திருப்பிச் செலுத்த முடியாமல், வங்குகளுக்கு ”தண்ணி” காட்டிக்கொண்டிருக்கிறார்.

வங்கிகள் பணத்தையும் வசூலிக்க முடியாமல், அவர் மீது எந்தவிதமான தீவிர நடவடிக்கையும் எடுக்கமுடியாமல் தடுமாறி வருகின்றன.

நீதிமன்றத்தில் விஜய் மல்லையா வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது. அவருடைய பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வழக்கு தொடுத்த 13 வங்கிகளும் வலியுறுத்தின.

விஜய் மல்லையா கடன் ஏய்ப்பாளர் என்று தெரிந்த பிறகும் ஏன் மீண்டும் மீண்டும் கடன் கொடுத்தீர்கள், என்று நீதிமன்ற நீதிபதியும் வங்கி அதிகாரிகளை கடிந்துள்ளார்.

வங்கி அதிகாரிகளுடைய சொந்த பணமாக இருந்தால் நிச்சயமாக அப்படி கொடுத்திருக்க மாட்டார்கள், என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

சக்திக்கு மீறிய கடன் இருப்பதால், அடைப்பதற்கு பதிலாக, தண்டனையிலிருந்து தப்புவதற்கான நடவடிக்கையில்தான் மல்லையா நிச்சயம் ஈடுபடுவார்.

அதற்காக, தனக்கிருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தொடர்புகளை முற்றிலும் பயன்படுத்தவே செய்வார்.

அதனால், அவர் மீதான நடவடிக்கை என்பது வெறும் கண்துடைப்பாகவே இருக்கும்.

பா.ஜ.வும் காங்கிரஸும் ஒருவர் மீது ஒருவர் மல்லையாவை தப்பவிட்டதில் பழியை போட்டுக்கொண்டாலும் இரண்டு கட்சிக்குள்ளுமே அவரை காப்பாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பதுதான் மக்கள் கணிப்பு.

விஜய் மல்லையா மட்டுமல்ல இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என எல்லோருமே மக்களின் சேமிப்பு பணங்களால் இயங்கும் வங்கிகளில் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி கோடிக்கணக்கில் கடன் வாங்கி ஏமாற்றுகிறார்கள்.

மக்கள் வரிப்பணத்தை சில அரசியல் வாதிகள் சூறையாடுவதுபோல, வங்கிப் பணத்தின் மீதும் இவர்கள் ஆசை தாவுகிறது.

வாங்கியவருக்கு வெளிப்படையான லாபம், அதற்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகளுக்கு மர்மமான லாபம்.

கடனை திருப்பி அடைப்பதற்கு பதிலாக, அதிகாரிகளையும் ஆட்சியில் இருப்பவர்களையும் திருப்திப்படுத்தி தப்பிவிடுகின்றனர்.

எந்த பிரபலத்தின் மீதாவது வங்கிக்கடன் வசூலிப்போ, வருமான வரி சோதனையோ செய்தால் அது காழ்ப்புணர்ச்சியால் பழிவாங்க மட்டுமே!

ஆனால், சாதாரண மக்களை வாங்கிய கடனுக்காக வங்கி அதிகாரிகள் வாட்டிவதைத்து, தாங்கள் கண்டிப்பானவர்கள் என்றும் பெயர் பெறுகிறார்கள்.

தக்கப்பட்ட தஞ்சாவூர் விவசாயி

தஞ்சாவூரை சேர்ந்த விவசாயி பாலன் (50) விவசாயத்துக்கு டிராக்டர் வாங்க, தனியார் நிதிநிறுவனத்தில் 3.8 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

அதில் ரூ.64 ஆயிரமாக ஆறு தவணைகளும் கட்டியுள்ளார். மீதி இரண்டு தவணைகளே பாக்கி இருந்த நிலையில், அறுவடை முடிந்து தருகிறேன் என்று சொல்லியதையும் பொருட்படுத்தாமல், நிறுவன ஊழியர்களும் காவலர்களுமாக சென்று, டிராக்டரை பறிமுதல் செய்ததோடு, அறுவடையில் இருந்த பாலனை அடித்து உதைத்து காவல் நிலையத்துக்கும் இழுத்துவந்துள்ளனர்.

இதைக் கண்டித்து சில விவசாயிகளும் கட்சிகளும் போராடினாலும் அது ஒரு பரபரப்புடன் ஒரு பரப்புதலை ஏற்படுத்துமே தவிர, அதுபோல இனி நடக்காதிருக்க ஒரு தீர்வை தருவதில்லை.

ஆட்சி சீர்கேடே அனைத்திலும் பிரதிபலிக்கும்

விவசாயி ஆனாலும், வாங்கிய கடனை திருப்பி தீர்க்க வேண்டியது அவர்கள் கடமைதான். அதன்மீது நடவடிக்கை எடுப்பதும் முறைதான். ஆனாலும், கஷ்டப்படுபவர்களிடம் கொஞ்சம் பொறுமையாக அணுகுவது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கட்டாயம் இருக்க வேண்டிய கருணை மனம்.

இதை உயர்வான வாழ்க்கை நெறிகளை கடைப்பிடிக்கும் சமுதாயத்தால் மட்டுமே கொண்டுவர முடியும். வெறும் சட்ட அச்சுறுத்தலால் முடியாது.

மேலும், இங்கு பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் மட்டுமே மனிதர்கள் ஓடுகிறார்கள். அதற்கு காரணம், ஒரு குழந்தை பிரசவிப்பது கூட பெருஞ்செலவு என்றாகிவிட்ட வாழ்க்கைமுறை.

உணவு, கல்வி, வீடு, வேலை, திருமணம் மட்டுமல்ல மரணச் செலவுகூட சராசரி மனிதனுக்கு எட்டாத விலைக்கு சென்றுள்ளது.

இவைகள் எளிதாக கிடைக்கச்செய்ய ஆட்சி செய்பவர்களுக்கு வழிதெரியவில்லை. ஆனால், அதை எப்படியும் விலை கொடுத்துவாங்க மக்களுக்குத் தெரிந்தது எவ்வழியிலாவது பணம் ஈட்டுவது ஒன்றுதான்.

அப்படி பணம் தேடும் முயற்சியில்தான் நேர்மை, நேயம் எல்லாம் மரத்துவிடுகிறது. லஞ்சம், ஊழல், சுயநலம் என கெட்டவர்களை பார்த்து கெடும் வழக்கம் அதிகரித்திருக்கிறது.

மக்களின் தேவைகள் பூர்த்தியாகும் ஒரு நல்ல நாட்டில்தான் கடுமையான சட்டங்கள் இல்லாமலே குற்றங்கள் குறையும்.

-மருசரவணன்

-http://www.newindianews.com

தஞ்சையில் டிராக்டர் கடன் கட்ட தாமதம்… விவசாயியை அடித்து இழுத்துச் சென்ற போலீஸ் ..ஆனால் கோடி ரூபாய் கடன் வாங்கிய விஜய் மல்லையா ஈசியாக ….

ரூ. 9000 கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா எல்லாம் ஈசியாக நாட்டை விட்டு ஓடிப்போக, தமிழ்நாட்டில் அதுவும் தஞ்சையில் டிராக்டருக்காக வாங்கிய கடனுக்கான கடைசி தவணையை செலுத்தவில்லை என்று கூறி விவசாயி ஒருவரை அடித்து இழுத்து சென்றுள்ளனர் போலீசார். இது காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாலன்,50. கடந்த 2011ம் ஆண்டு தஞ்சையில் உள்ள கோட்டக் மகேந்திராவின் ரூ.3.80 லட்சம் கடன் பெற்று, டிராக்டர் வாங்கியுள்ளார். இந்தக் கடனுக்காக தலா ரூ.64 ஆயிரம் வீதம் 6 தவணைகளைச் செலுத்தியுள்ளார். இந்நிலையில், கடைசி 1 தவணை நிலுவை இருந்ததாகவும், நெல் அறுவடை முடிந்த பின்னர் தவணைத் தொகையைச் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், நிதி நிறுவன ஊழியர்கள், ரூ.32 ஆயிரத்தை முதலில் செலுத்துங்கள் என்று கூறி, அந்த தொகையைப் பெற்றுள்ளனர். சில நாட்கள் கழித்து அவரது டிராக்டரை ஜப்தி செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 4ம் தேதியன்று நெல் அறுவடையில் பாலன் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த பாப்பாநாடு காவல் நிலைய ஆய்வாளர் குமாரசாமி மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள், டிராக்டரில் இருந்து பாலனை கீழே தள்ளி, சரமாரியாக அடித்தனர். பின்னர் அவரைக் காவல் நிலையத்துக்கு கையை பிடித்து இழுத்துச் சென்றதுடன், டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்கவும், அவரை விடுவிக்கவும் அவரது உறவினர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவரை போலீசார் விடுவித்துள்ளனர். இதற்கிடையில், டிராக்டரில் அமர்ந்திருந்த விவசாயி பாலனை கீழே தள்ளி, போலீசார் அடித்து, இழுத்துச் சென்ற வீடியோ, வாட்ஸ்அப் மூலம் நேற்று பரவியது. இது, டெல்டா விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த சோழகன்குடிக்காடு கிராமம், தமிழக விவசாயத் துறை அமைச்சர் வைத்திலிங்கத்தின் தொகுதிக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவலறிந்த தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், பாலனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், ஒரத்தநாட்டில் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஒரத்தநாடு வட்டாட்சியர், டிஎஸ்பி ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயி தாக்கப்பட்டதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர், இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகி வெ.ஜீவக்குமார் கூறும்போது, “தனியார் நிதி நிறுவனங்கள் கூலிக்கு ஆட்களை நியமித்து, சட்டத்துக்குப் புறம்பாக, விவசாயிகளின் டிராக்டர் போன்ற வாகனங்களைப் பறிமுதல் செய்கின்றன. இதை, உச்ச நீதிமன்றம் வன்மையாகக் கண்டித்துள்ளது. விவசாயக் கடன் தாவாவில், போலீஸார் நேரடியாக தலையிட்டது சட்டப்படி குற்றம். விவசாயியை அடித்து இழுத்துச் சென்ற நிதி நிறுவன ஊழியர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட போலீஸாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

9000 கோடி ரூபாய் வங்கியில் கடன் வாங்கிய விஜய் மல்லையா எல்லாம் ஈசியாக நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிடுகிறார்கள். ஆனால் ஒரு ஒரு தவணை கட்டத் தவறிய விவசாயியை அடித்து இழுத்துச் சென்று போலீசார் அவமானப்படுத்தியுள்ளனர் என்பது டெல்டா மாவட்ட விவசாயிகளின் ஆதங்கமாக உள்ளது.

-http://www.athirvu.com

TAGS: