என்னால் மூச்சு விட முடியல.. ப்ளீஸ் தண்ணி கொடுங்க.. தலித் வாலிபர் சங்கரின் கடைசி வார்த்தை

tirupur-dalit-murder

சென்னை: என்னால் மூச்சுவிட முடியல.. ப்ளீஸ் தண்ணீர் கொடுங்க என்பதுதான் ஜாதி ஆணவத்தால் கொலை செய்யப்பட்ட சங்கர் பேசிய கடைசி வார்த்தையாகும். உடுமலைபேட்டை பஜாரில் தலித் இளைஞர் சங்கர் கூலிப்படையினரால் சரமாரியாக வெட்டப்பட்டார்.

அவரது மனைவி கவுசல்யாவும் வெட்டப்பட்டார். ஜாதி மாறி திருமணம் செய்ததற்காக இந்த ஆணவ தாக்குதல் நடந்துள்ளது அம்பலமானது. வெட்டப்படும் காட்சிகள் சிசிடிவி காமிராவில் பதிவானது. நாடு முழுவதும் மட்டுமின்றி, உலகமெங்கும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சங்கர் மற்றும் கவுசல்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு உள்ளான காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன.

சிகிச்சை பலனின்றி சங்கர் உயிரிழந்த நிலையில், கவுசல்யா உயிர் பிழைத்து சிகிச்சை பெற்றுவருகிறார். இதனிடையே, சங்கருக்கு சிகிச்சையளிக்கும் காட்சி மிகவும் கொடூரமாக உள்ளது.

அந்த காட்சியில், ஐசியூ போன்ற தனித்த பிரிவில் வைத்து சிகிச்சையளிக்காமல் பொது பிரிவில் வைத்து மருத்துவ ஊழியர்கள் முதலுதவி செய்கிறார்கள். ரத்தம் கொப்பளிக்கும் பகுதிகளில் பஞ்சு வைத்து கட்டப்படுகிறது. பாதி மயக்க நிலையில் கிடந்த சங்கருக்கு ட்ரிப்ஸ் ஏற்றப்படுகிறது.

அப்போது, “ப்ளீஸ், ப்ளீஸ் தண்ணி குடுங்க. தண்ணி குடுங்க. என்னால மூச்சு விட முடியல..” என சங்கர் கதறுகிறார். தண்ணீர் கொடுப்பது போன்ற காட்சி எதுவும் வீடியோவில் இல்லை.

பின்னர், ஆம்புலன்சில் ஏற்றி மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படும் காட்சி அதில் உள்ளது. ஆம்புலன்சில் கவுசல்யா அமர்ந்திருக்க, சங்கர் உயிருக்கு போராடியபடி ட்ரிப்ஸ் ஏற்றிய நிலையில் கொண்டு செல்லப்படுகிறார்.

இதன்பிறகுதான் சங்கர் உயிரிழந்துள்ளார். இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், சிகிச்சை நடைபெறுவது முதற்கொண்டு வீடியோ காட்சிகளாக பதிவாகியுள்ளது.

இன்பெக்ஷனை தவிர்க்கும் வகையில் கூட்டம் சேருவதை மருத்துவர்கள் தவிர்ப்பது அவசியம். ஆனால், சந்தைக்கடை போல கூட்டம் நிரம்பி வழியும் ஒரு இடத்தில் சங்கருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. மூச்சு திணறலால் அவதிப்பட்ட சங்கருக்கு பிராணவாயு கொடுக்கப்படவில்லை என்பதும் அந்த வீடியோ காட்சிகளில் அம்பலமாகியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: