டெல்லி: தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என்று டெல்லியில் நடைபெற்ற சூபி மாநாட்டை துவக்கி வைத்த பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் உலக சூபி மாநாடு நடைபெறுகிறது. நேற்று துவங்கிய மாநாடு வரும் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் 20 நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய பண்டிதர்கள், கல்வியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசுகையில், பல மதங்களை வளப்படுத்திய, அமைதி மற்றும் நம்பிக்கைகளின் பழம்பெரும் பூமிக்கு உங்களை வரவேற்கிறேன். சூபி மரபு பன்முகத் தன்மையும், கலாச்சாரங்களையும் கொண்டாடுகிறது.
புனித குர்ரான் மத நல்லிணக்கத்தை மட்டுமே வலியுறுத்தி வருகிறது. இந்தியா மத நல்லிணக்கத்தின் மேல் நம்பிக்கை வைத்துள்ளது. இந்தியா என்பது அனைத்து சிறு பான்மை இனத்தவர்களின் ஐக்கியமாகும். இங்கு பல மதத்தினருக்கும் இடம் உண்டு. அல்லாவிற்கு 99 பெயர்கள் உள்ளன. ஆனால் ஒன்று கூட வன்முறையை குறிக்கவில்லை. அல்லாவின் முதல் இரண்டு பெயர்கள் பரிவையும் இரக்கத்தையும் குறிக்கிறது.
இந்து, முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர், புத்தம், பார்சிகள், இறை நம்பிகை உடையவர்கள், அல்லாதவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த இந்தியாவின் பகுதி தான். தீவிரவாதம் நம்மை பிரிக்கிறது, நம்மை அழிக்கிறது. தீவிரவாத்திற்கு எதிரான போராட்டம் எந்த ஒரு மதத்திற்கும் எதிரானது அல்ல. நாம் ஒரு புதிய நூற்றாண்டின் அரிதான, மனித வரலாறு காணாத மாற்றத்திற்கான காலத்தில் இருக்கிறோம். இந்த மாநாடு மிக முக்கியமானது. உலகை வன்முறை என்னும் இருள் நம்மை சூழும் போது நீங்கள் தான் நம்பிகை ஒளியாக இருக்கிறீர்கள் என்று மோடி கூறினார்.