பிளாட்பார குழந்தைகள் கடத்தல்… கதறி அழுத லதா ரஜினிகாந்த்.. நடவடிக்கை கோரி மனு!

latha-rajinikanthசென்னை: சென்னையில் நடைபாதையில் தூங்கிய பெற்றோரின் பச்சிளம் குழந்தைகள் திருடப்பட்டதை அறிந்து லதா ரஜினிகாந்த் கதறி அழுதார். குழந்தைகளை உடனடியாகக் கண்டுபிடித்துத் தருமாறு அவர் தனது தயா பவுண்டேஷன் மூலம் போலீஸ் கமிஷனரிடம் மனுவும் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் பார்த்திபன் கூறுகையில், “சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் என்னோடு தொலைபேசியில் பேசினார். கதறி அழுதபடி அவர் போனில் பேசினார். என்ன பிரச்சினை? ஏன் அழுதுகொண்டே பேசுகிறீர்கள்? என்று அவரிடம் கேட்டேன்.

‘இன்று காலையில் பத்திரிகையில் வந்த செய்தியை படித்தேன். என் மனசு தாங்கல. பிளாட்பாரத்தில் பெற்றோருடன் தூங்கிய 2 குழந்தைகள் காணாமல் போய்விட்டதாகவும், அந்த குழந்தைகள் கடத்தி செல்லப்பட்டிருக்கலாம் என்றும் செய்தி வந்துள்ளது, அந்த செய்தியை பார்த்தவுடன் எனக்கு அழுகை வந்துவிட்டது. கடத்தப்பட்ட குழந்தை ஒன்று ஆண் குழந்தை, இன்னொன்று பெண் குழந்தை. இரண்டுமே பச்சிளம் குழந்தைகள். இதுபோல் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு, நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்று அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார்.

அதன் அடிப்படையில் எனது தலைமையில் இயங்கும் பார்த்திபன் மனிதநேய மன்றம் சார்பிலும், லதா ரஜினிகாந்த் நடத்தும் தயா பவுண்டேஷன் சார்பிலும், எம்.பி.நிர்மல் அவர்களின் எக்ஸ்னோரா அமைப்பின் சார்பிலும் போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்.

எங்கள் கோரிக்கை மனுவை படித்து பார்த்த போலீஸ் கமிஷனர் ஏற்கனவே அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கண்டிப்பாக காணாமல் போன குழந்தைகள் மீட்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். உடனடியாக சம்பந்தப்பட்ட இணை போலீஸ் கமிஷனரோடும், போனில் தொடர்பு கொண்டு பேசி துரித நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.

அவரது உடனடி நடவடிக்கைகள் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது,” என்றார். புகார் கொடுத்த பார்த்திபனிடம் பிளாட்பாரத்தில் தூங்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஒரு விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்துமாறு போலீஸ் கமிஷனர் கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க, விரைவில் அதுபோன்ற விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ளப் போவதாகவும் பார்த்திபன் தெரிவித்தார்.

tamil.oneindia.com

TAGS: