இந்தியா முழுவதும் அவசர அழைப்புக்கென இனி ஒரே எண்

telefonoஇந்தியாவில் நாடு முழுவதும் அவசர அழைப்புக்கென 112 என்ற ஒரே எண்ணை பயன்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஒரே எண்ணின் மூலம் காவல்துறை, அவசர மருத்துவசேவை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினரையும் தொடர்புகொள்ள முடியும்.

இந்தத் திட்டத்தை தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்புத் துறை அமைச்சரின் அனுமதி கிடைத்ததும் இந்தத் திட்டம் சில மாதங்களிலேயே நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

அவசர கால அழைப்புகளுக்கென ஒரே எண்ணைப் பயன்படுத்தும் திட்டத்தை இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முன் வைத்தது.

தற்போது, இந்தியாவில் காவல்துறையை அழைக்க 100ஐயும் தீயணைப்புத் துறைக்கு 101ஐயும் அவசர மருத்துவ சேவைக்கு 108ஐயும் அழைக்க வேண்டும்.

சில மாநிலங்களில் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளின்போது அழைப்பதற்கென பல எண்களை பயன்படுத்துகின்றன.

112 அமலுக்கு வந்த பிறகு எல்லா எண்களும் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கிலிருந்து அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

-BBC

TAGS: