மும்பை: பாரத் மாதா கி ஜே என சொல்லாதவர்கள், இந்தியாவில் வசிப்பதற்கு தகுதியில்லை என பேரணி ஒன்றில் மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவீஸ் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய சர்ச்சையை தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், வரும் தலைமுறையினருக்கு பாரத் மாதா கி ஜே என சொல்லித்தர வேண்டும் எனக்கூறினார். ஆனால், கழுத்தில் கத்தியை வைத்தாலும் பாரத் மாதா கி ஜே என சொல்ல மாட்டேன் என எம்.ஐ.எம்., கட்சியின் ஒவாய்சி கூறினார். இதனால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் தருல் உலூம் தியாபாந்த் அமைப்பு, முஸ்லீம்கள் பாரத் மாதா கி ஜே என சொல்லக்கூடாது என பத்வா பிறப்பித்தது. மேலும், நாட்டை நாம் விரும்புகிறோம். இந்துஸ்தான் ஜிந்தாபாத் போன்ற கோஷங்களை எழுப்பலாம் என அந்த அமைப்பு வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளது.
நாசிக்கில் நடந்த பேரணி ஒன்றில் பா.ஜ.,வினர் மத்தியில் பேசிய மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவீஸ், இந்தியாவில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள், பாரத் மாதா கி ஜே என கூற விரும்புகின்றனர். அவ்வாறு கூற விருப்பம் இல்லாதவர்கள் இந்தியாவில் வாழ தகுதியில்லை. அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம் எனக்கூறியுள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து தனது பேச்சுக்கு விளக்கமளித்த பட்நாவீஸ், ஜெய் ஹிந்த், ஜெய் பாரத், ஜெய் ஹிந்துஸ்தான் என சிலர் கூறுவதிலும் எங்களுக்கு எந்த பிரச்னையில்லை. ஆனால், பாரத் மாதா கி ஜே என சொல்ல மாட்டேன் என்பவர்களை தான் நாங்கள் எதிர்க்கிறோம். பொறுமையாக இருப்பதற்கும் ஒரு அளவு உண்டு. பாரத் மாதா ஜே என்ற கோஷத்தை எதிர்ப்பவர்களுக்கு ஒரு கெட்டநோக்கமும் எண்ணமும் உள்ளது. நாட்டை பிரிக்கவும், பிரச்னை ஏற்படுத்தவும், ஒற்றுமையை சீர்குலைக்கவும் அவர்கள் முயற்சி செய்கின்றனர். இதனை நாங்கள் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும் எனக்கூறினார்.
-http://www.dinamalar.com