ஜல்லிக்கட்டை நடத்த அக்கறை இல்லாத திமுகவும், அதிமுகவும், தேர்தல் வந்ததும் ஜல்லிக்கட்டு நடத்துவதாக வேஷம் போடுகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.
மேலும், ஜல்லிக்கட்டு தடை பின்னணியிலுள்ள அரசியலையும் அவர் முழுமையாக விளக்கினார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நாம் தமிழர் வேட்பாளரைஆதரித்து, சீமான் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், காளைகளை வதைக்கிறோம் என்று ஜல்லிக்கட்டை மட்டும் ஏன் தடை விதிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில்தான் அரசியல் உள்ளது.
1970 களில் நம்மிடம் 7 கோடி நாட்டு மாடு இருந்தது. ஒரு வீட்டில் பால் மாடும், முருங்கை மரமும் இருந்தால் அந்த வீடு வறுமையை சந்திக்காது என்கிறார்கள்.
இந்த நாட்டு மாடு என்பது, காங்கேயம், கார்பர்க்கர், சாக்கிவால், சிவபசக்கி, உப்பளஞ்சேரி, பர்கூர் மலைமாடு, சிந்தி, ஓங்கோல், புளியங்குளம்பட்டி, தேனி மலை மாடு என பல வகை மாடுகள் நம்மிடம் இருந்தது.
இப்போது நம்மிடம் இருப்பது ஜெர்சி மட்டும்தான். வெண்மைபுரட்சி என்று கூறி ஜெர்சியை நம்மிடம் கட்டிவிட்டார்கள். நமது நாட்டு மாடு அதிகம் தீனிவைத்தால் 3 லிட்டர் பால் கறக்கும். நம் தாய் பால் போல தூய்மையானது இது.
ஆனால் ஜெர்சி 8 லிட்டர் கறக்கும் என ஆசை காட்டி நமது தலையில் அதை கட்டினர். வெண்மை புரட்சி என்ற பெயரில் நமது பாரம்பரிய நாட்டு மாடுகளை அழிக்க முடிவு செய்தனர்.
நாட்டு மாட்டில் ஆன்டிபயாட்டிக் என்ற நோய் எதிர்ப்புசக்தி உள்ளது. இந்த மாடு போடும் சாணம்தான் உரமாகிறது. இந்த நாட்டு மாடு இருக்கும் வரை இயற்கை வேளாண்மையை விட்டு விவசாயி வெளியேற மாட்டான்.
ஜப்பானில் போடப்பட்டதற்கு இணையான, அணுகுண்டு மூலப்பொருளில் இருந்துதான், பொட்டாசியம், சல்பேட் போன்ற உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கப்பட்டன.
அதை விற்பனை செய்யும் சந்தை எது என பார்க்கிறார்கள். உலகின் 2வது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா என்பதால், அதை நம் மக்கள் தலையில்கட்ட அனுப்பி வைத்தனர்.
நம்மிடம் பாரம்பரிய பயிர்வகை இருந்தது. கருடஞ்சம்பா,சீரக சம்பா உள்ளிட்ட 136 வகை பயிர்கள் இருந்தன. இந்த நெல் மிக உயரமாக வளரும்.
90 நாட்களுக்கு பிறகுதான் பலன் கொடுக்கும். எனவே அமெரிக்காவிலுள்ள ராக்பெல்லர் பவுண்டேசன் குள்ளமாக வளரும் பயிர்களை கண்டுபிடித்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள்.
குள்ளமான நெல் 60 நாளில் விளைந்துவிடும், நிறைய மகசூல் தரும் என்றும் கூறினார்கள். வேளாண் அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்து விவசாயிகளிடம் இதுதான் நல்ல பயிர் என சொல்ல வைத்தனர்.
டிராக்டர்களை விற்பனை செய்ய வசதியாக பல்லாயிரக்கணக்கான காளை மாடுகளை வெட்டி கொன்றனர். டிராக்டர் கொண்டுவரப்பட்டது.
தஞ்சையை சேர்ந்தவரான, மகாத்மா காந்தியின் உதவியாளர் குமாரப்பா “டிராக்டர் சாணி போடுமா” என்று அப்போதே ஒரு கேள்வியை கேட்டார்.
நம்மில் யாரும் கேட்கவில்லை. ஏனெனில், நாட்டு மாடு சாணத்தால்தான் பயிர்கள் வளரும். இப்போதுள்ள ஜெர்சி சாணத்தில் சத்து கிடையாது.
அந்த சாணத்தை அடுத்த நாள் எடுத்து பார்த்தால் வண்டு,பூச்சி கூட உள்ளே இருக்காது. அத்தனையும் விஷம்.
மக்களிடம் பிரபலப்படுத்த வெளிநாட்டு நெல் விதையை முதலில் இலவசமாக கொடுத்தனர். எனவே, நாம் பாரம்பரிய நெல்லை சேமிக்காமல் விட்டுவிட்டோம்.
ஜெர்சி பாலால், செரிமான கோளாறு, சிறு வயதில் பெண்கள்பூப்படைதல், மார்பக புற்றுநோய், சர்க்கரை நோய் உருவாகுகிறது.
சர்க்கரை நோயாளிகளால் நமது நாடு நிரம்பிவிட்டது. இதற்கான, இன்சுலின் ஊசியாலும் பல கோடியை அமெரிக்கா சம்பாதித்துவிட்டது.
நமக்கு யார் பூச்சி மருந்தை சப்ளை செய்தார்களோ அதே வெள்ளையர்கள் இப்போது நமது காய்கறியில் விஷம் இருப்பதாக கூறி கொள்முதல் செய்வதில்லை.
அவர்கள் இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களைதான் சாப்பிடுகிறார்கள். கேரளாகூட தமிழக காய்கறிகளை வாங்க மறுத்தது.
இதுதான் அரசியல். இதை நுட்பமாக புரிந்துகொள்ள வேண்டும். இரட்டை இலையும், உதயசூரியனும்தான் அரசியல் என நாம் தப்பாக புரிந்து வைத்துள்ளோம்.
இப்படி, இரு கட்சிகளுமே பெரும் நாடகத்தை நடத்திவிட்டு, ஓட்டு வேண்டும் என்பதற்காக, இப்போது ஜல்லிக்கட்டு விஷயத்தை பேசிக்கொண்டு வருகிறார்கள்.
இப்படிப்பட்ட முட்டாள் தனத்தில் இருந்து தமிழன் விடுதலை பெற வேண்டும் என்று பேசியுள்ளார்.
-http://news.lankasri.com