இந்தியப் பொருளாதார வளர்ச்சி நிகழாண்டில் 7.3 %ஆக இருக்கும்: ஐ.நா. அறிக்கை

india_001இந்தியப் பொருளாதார வளர்ச்சி நிகழாண்டில் 7.3 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசப் பொருளாதார நிலை குறித்த ஐ.நா.வின் அறிக்கை வியாழக்கிழமை வெளியானது. அதில் இந்தியப் பொருளாதாரம் குறித்த விவரங்களும் இடம் பெற்றுள்ளன. அதன்படி, இப்போது இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, நிகழாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாகவே இருக்கும். அடுத்த ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக அதிகரிக்கலாம்.

இதன் மூலம் சர்வதேச அளவில் சிறப்பான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கும்.

அதே நேரத்தில், சீனப் பொருளாதார வளர்ச்சி நிகழாண்டில் 6.4 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில் 6.5 சதவீதமாகவும் இருக்கும். 2015-ஆம் ஆண்டில் சீனப் பொருளாதார வளரச்சி 6.9 சதவீதமாக இருந்தது.

சர்வதேச அளவில் பொருளாதார சுணக்கம் ஏற்பட்டிருந்தாலும், தெற்காசியாப் பிராந்தியத்தில் பொருளாதாரம் ஸ்திரமாகவே உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கும் மிகவும் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.dinamani.com

TAGS: