சென்னை: ஏழைகளின் சின்னம் இரட்டை இலை, உதயசூரியன் என்று 50 ஆண்டுகாலமாக கூறி மக்களை ஏழையாகவே திமுகவும் அதிமுகவும் வைத்துவிட்டன என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சாடியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று சீமான் கூறியதாவது: 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வந்த கட்சிகள் இதுவரை மக்களின் ஏழ்மை நிலையை போக்க எந்தவித முயற்சியும் செய்யவில்லை.
ஏழ்மை நிலையை போக்காத எவ்வித முயற்சியும் எடுக்காத அரசுகள் இனி எதற்கு? மக்களின் வாழ்க்கை தரம் மேலும் மேலும் வீழ்ந்து வருகிறதே தவிர எவ்வித முன்னேற்றமும் ஏறபடவில்லை. தொழில்துறை நலிந்துள்ளது. இலவசங்களைக் கொடுத்து மக்கள் முன்னேறி விடாமல் இருக்க இரு கழகங்களும் கண்ணும் கருத்துமாக வேலை செய்கின்றன.
டாஸ்மாக்கை கொண்டு வந்து நாட்டையும் நாட்டு மக்களையும் ஒட்டுமொத்தமாக அதிமுகவும் திமுகவும் சீரழித்துவிட்டன. மக்கள் பிச்சையெடுக்கும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர் விவசாயம் நலிந்து விட்டது, கனிம வளக் கொள்ளை, அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் ஊழல் என்று நாட்டையே குட்டி சுவராக்கிவிட்டனர் மக்கள் இன்று அனைத்திற்கும் யாரையாவது சார்ந்து வாழும் நிலையையும் சுய சார்பற்றவர்களாக வைத்திருப்பதையே இரு கழகங்களும் ஆர்வமாக உள்ளன.
இன்று மக்களிடமும் வாக்கு கேட்டு செல்லும் திமுகவும் அதிமுகவும் ஏழைகளின் சின்னம் உதய சூரியன் ஏழைகளின் சின்னம் இரட்டை இலை என்றுதான் கூறி வாக்கு சேகரிக்கின்றனர்.
50 ஆண்டுகளாக நாட்டை இவர்கள் சிறப்பாக ஆண்டிருந்தால் நாட்டை முனேற்றப் பாதையில் அழைத்துச் சென்றிருந்தால் இன்றும் போய் மக்களிடம் ஏழைகளின் சின்னம் என்று வாக்கு கேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
ஏழைகளின் சின்னம் தங்களது சின்னம் என்று வாக்கு கேட்பதன் மூலம் ஏழ்மை நிலையை இன்னும் ஒழிக்கவில்லை என்பதே அவர்களது வாக்குமூலம். அதனால்தான் மக்கள் இன்று இந்த இருகட்சிகளையும் புறக்கணித்து விட்டு மாற்றத்தை நாடுகின்றனர்.
50 ஆண்டுகளாக ஆட்சி செய்தும் ஏழ்மை நிலையை இன்னும் போக்க இயலவில்லை என்றால் இது போன்ற அரசுகள் இனிமேல் எதற்கு?. இவ்வாறு சீமான் கூறினார்.