தமிழக மக்களுக்கு நன்றி சொல்ல அகராதியில் வார்த்தைகளே இல்லை.. ஜெ. உருக்கமான பேட்டி

jayalalitha-campoaignசென்னை: நெஞ்சத்தின் அடித்தளத்தில் இருந்து எழும் நன்றி உணர்வை வெளிப்படுத்த தமிழ் அகராதியில் வார்த்தை இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். அதிமுக வெற்றிமுகத்தில் இருக்கும் தகவல் வெளியானதும், முதல்வர் ஜெயலலிதாவை, அரசு உயர் அதிகாரிகள் சந்தித்து பூங்கொத்து கொடுத்தும், காலில் விழுந்தும், வாழ்த்து தெரிவித்தனர்.

வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா, இதன்பிறகு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது, நெஞ்சத்தின் அடித்தளத்தில் இருந்து எழும் நன்றி உணர்வை வெளிப்படுத்த தமிழ் அகராதியில் வார்த்தை இல்லை. 1984ம் ஆண்டுக்குப் பிறகு ஆளும் கட்சி தேர்தலில் மீண்டும் வெல்வது என்பது இப்போதுதான் நிகழ்ந்துள்ளது.

10 கட்சிகள் எதிர்த்தபோதும் நான் ஆண்டவனை நம்பி மக்களுடன் கூட்டணி வைத்தேன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். மகேசன் என்றால் மக்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம். தமிழக மக்கள் என்னை கைவிடவில்லை, என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களால் நான்… மக்களுக்காகவே நான் என்பதே பிரசாரத்தில் தாரக மந்திரம்.

எனக்கென்று வேறு தனிப்பட்ட வாழ்க்கை கிடையாது. எனது வாழ்வு தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது மக்களுக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன். தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். மக்கள் தொண்டில் எனது வாழ்வை கழிப்பேன். தமிழக மக்களுக்கு என்னென்றும் நன்றி கடன்பட்டுள்ளேன். வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணி கட்சி தலைவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார்.

tamil.oneindia.com

TAGS: