எல்லைப் பிரச்னையைத் தீர்க்க இந்தியாவுடன் பேசத் தயார்: சீனா

india_china_map_20121022

எல்லைப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக இந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை சீனாவுக்குச் செல்ல இருக்கிறார். இந்நிலையில், சீனா இவ்வாறு அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முன்னதாக, சீன அரசுத் தொலைக்காட்சிக்கு அண்மையில் பேட்டியளித்த பிரணாப் முகர்ஜி, அந்நாட்டுடனான எல்லைப் பிரச்னைக்கு நியாயமான, ஏற்கத்தக்க தீர்வு காண இந்தியா விரும்புவதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹூ சன்யிங் இது தொடர்பாக பெய்ஜிங்கில் திங்கள்கிழமை கூறியதாவது:

இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சீனாவுக்கு முதல்முறையாக வருகைதர இருக்கிறார். அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையைத் தீர்ப்பது குறித்து பேச்சு நடத்த சீனா எப்போதும் தயாராகவே உள்ளது. இருதரப்பு உறவையும தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்றே எங்கள் நாடு விரும்புகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டவும், இரு தரப்புக்கும் இடையே உள்ள பிரச்னைகளைத் தீர்க்கவும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரணாப் முகர்ஜியின் சீனப் பயணம் இரு தரப்பு உறவில் மற்றொரு முக்கிய மைல் கல்லாக இருக்கும் என்று நம்புகிறோம். அண்மைக் காலமாக இரு நாடுகளும் பல்வேறு விஷயங்களில் நட்புறவுடன் செயல்பட்டு வருகின்றன என்றார் அவர். சீனா செல்லும் பிரணாப் முகர்ஜி அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

-http://www.dinamani.com

TAGS: