இந்தியாவில் 96 நிமிடத்திற்கு ஒரு ‘குடி’மகன் பலி… 3வது இடத்தில் “டாஸ்மாக்” தமிழகம்!

24-1437726721-tasmac11-600டெல்லி: இந்தியாவில் 96 நிமிடங்களுக்கு ஒருவர் என்ற கணக்கில் ஒவ்வொரு நாளும் 15 பேர் உயிரிழந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மது நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு எனச் சொன்னாலும், தொடர்ந்து ‘குடி’மகன்கள் அதனை விடுவதாய் இல்லை. ஆனால், போதைக்காக குடிக்கும் மது, கொஞ்சம் கொஞ்சமாக ஆட்களைக் கொல்லும் விஷம் என்பது ஏனோ மது பிரியர்களுக்குத் தெரிவதில்லை. இந்நிலையில், இந்தியாவில் மதுவால் நாள்தோறும் 15 பேர் உயிரிழந்து வருவதாக தேசிய குற்றப்பதிவு ஆணைய கணக்கீட்டின் 2013ம் ஆண்டு புள்ளிவிபர அறிக்கையை வைத்து இந்தியா ஸ்பெண்ட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் மது அருந்துவோரின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார மைய அறிக்கை கூறுகிறது. இதற்கிடையே இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்ற முழக்கமும் தொடர்ந்து வருகிறது.

அதன்படி, குஜராத் மற்றும் நாகலாந்தில் பூரண மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. பீகாரிலும் சமீபத்தில் மதுவிற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் பூரண மதுவிலக்குக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக சட்டசபைத் தேர்தலிலும்கூட இந்த மதுவிலக்கு என்ற வார்த்தை வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகித்தது என்பதை மறுக்க இயலாது. மீண்டும் முதல்வராக பதவியேற்றதும் அதிமுக தேர்தல் வாக்குறுதியின்படி, முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் முதல்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். கூடவே மதுக்கடைகளின் திறக்கும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.

இப்படியாக மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையைக் குறிக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், உலக அளவில் இந்தியாவில் தான் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது மறுக்க இயலாத உண்மை

உலகம் முழுவதும் சராசரியாக மது குடிக்கும் 16 சதவீதம் பேரில் 11 சதவீதம் பேர் இந்தியாவில் தான் உள்ளனர் என்கிறது ஒரு புள்ளி விபரம். இந்தியாவில் பெரும்பாலான குற்றங்களுக்கு மூல காரணம் மது தான் என ஆய்வுகள் கூறுகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் 96 நிமிடங்களுக்கு ஒருவர் என்ற கணக்கில் ஒவ்வொரு நாளும் 15 பேர் உயிரிழந்து வருவதாக தேசிய குற்றப்பதிவு கணக்கீட்டின் 2013ம் ஆண்டு புள்ளிவிபர அறிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் மதுவால் அதிகமானவர்கள் உயிரிழக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், மத்திய பிரதேசம் 2வது இடத்திலும், தமிழகம் 3வது இடத்திலும், கர்நாடகா 4வது இடத்திலும், அரியானா 5வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: