பள்ளி, கோவில் அருகே டாஸ்மாக் கடை: முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் கைது

tasmac-shopநெல்லை: நெல்லை அருகே பள்ளி மற்றும் கோவில் அருகே டாஸ்மாக் கடைகள் இருப்பதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. நெல்லை அருகே உள்ள களக்காட்டில் மொத்தம் 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன. பள்ளி மற்றும் கோவில் அருகே டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளும், கோவிலுக்கு வரும் பக்தர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே, இந்த 2 கடைகளையும் மூட வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பொது நல அமைப்பினர் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பினர். ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகளை மூடப்போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி களக்காட்டில் பக்தர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளையும் மூட வலியுறுத்தி நேற்று மாலை திடீரென பொதுமக்களும், மக்கள் போராட்ட குழுவினரும் குவிந்தனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழக இளைஞரணி செயலாளர் நெல்சன் தலைமையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர். இந்நிலையில் நாங்குநேரி ஏஎஸ்பி சுகுனாசிங் தலைமையிலான போலீசார் உடனடியாக டாஸ்மாக் கடை முன்பு குவிக்கப்பட்டனர். பாதி வழியிலேயே போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: