கறுப்பு பணத்தை மீட்க உதவுவோம்: மோடிக்கு சுவிஸ் அதிபர் உறுதி

handshake-swissசுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் உட்பட ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிநேற்று முன்தினம் இரவு சுவிட்சர்லாந்து சென்றடைந்தார்.

அங்கு நேற்று காலை சுவிட்சர்லாந்து அதிபர் ஜோஹான் சினிடர் அம்மானை சந்தித்து பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது இரு தரப்பு வர்த்தகம், சுற்றுலா மேம்பாடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக இந்தியர்களால்பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

விவாதத்திற்கு பின்னர் இருநாட்டு தலைவர்களும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சுவிட்சர்லாந்து அதிபர், 48 உறுப்பினர்களைக் கொண்ட அணு சக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவும் இணைய சுவிட்சர்லாந்து ஆதரவு அளிக்கும்.

அதேபோல இந்தியாவில் இருந்து கறுப்புப் பணத்தை சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்குவதைத் தடுக்கும் அந்நாட்டு அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படும்.

இது தொடர்பாக விவாதிக்க சர்வதேச நிதி விவகாரங்களுக்கான சுவிட்சர்லாந்து அரசுத் துறை அதிகாரி வரும் 14ம் திகதி இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் மோடி பேசுகையில், கறுப்பு பணத்தை மீட்க இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதற்கும், அணு சக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவை இணைத்து கொள்ள ஆதரவு அளிப்பதற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கறுப்புப்பண புழக்கத்தை ஒடுக்குவது மிக முக்கியமான பிரச்னை. அந்த வகையில், வரி ஏய்ப்பு என்பது இரண்டு நாடுகளுக்கும் மிகவும் முக்கியமானது.

வரி ஏய்ப்பாளர்கள் குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்வது குறித்து விவாதித்தோம். இதற்கான ஒப்பந்தம் செய்வது தொடர்பான பேச்சை உடனடியாக தொடங்க உள்ளோம்.

பல்வேறு சுவிஸ் நிறுவனங்கள் இந்தியாவில் பல ஆண்டுகளாக நற்பெயருடன் செயல்பட்டு வருகின்றன. இரு நாடுகளிடையே வர்த்தக, முதலீட்டு உறவை மேம்படுத்துவது குறித்து விவாதித்தோம்.

சுவிட்சர்லாந்தில் உள்ள தொழிற்கல்வி நிலையங்களின் கிளைகளை இந்தியாவில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைப்படத் துறையில் சுவிட்சர்லாந்து முக்கிய இடம் பிடித்துள்ளது.

விளையாட்டுத் துறையில் கூட இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரங்களான சானியா மிர்ஸா, லியாண்டர் பயஸ் ஆகியோர் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர்.

இந்தியா- சுவிட்சர்லாந்துக்கு பல்வேறு வெற்றிக் கதைகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: