இந்தியாவில் 5 நிமிடத்திற்கு ஒரு கர்ப்பிணி மரணம்- ஹூ அதிர்ச்சி தகவல்

pic03டெல்லி: இந்தியாவில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பேர் மகப்பேறுக்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கால் உயிரிழக்கிறார்கள் என்றும் இதை தடுக்க இரத்த தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறப்பு என்பார்கள். பிரசவ காலத்தில் அதிக ரத்த போக்கு, தொற்று, சரியான சிகிச்சை இல்லாதது, ஊட்டச் சத்து குறைவு போன்ற பல காரணங்களால் பல பெண்கள் உயிரிழக்கின்றனர். உலகம் முழுவதும் ஆண்டு தோறும் 5,29,000 பெண்கள், மகப்பபேறின் போது இறப்பதாகவும், அதில் 1,36,000 பேர், அதாவது 25.7 சதவீத மரணம் இந்தியாவில் நிகழ்கிறது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

பிரசவ காலத்தில் பெண்கள் மரணம் அடைவது கவலைக்குரியது. கருத்தரிப்பதில் இருந்து குழந்தை பிறப்பது வரையான கால கட்டத்தில் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பெண்கள் மரணம் அடைவது சாதாரண ‌நிக‌ழ்வாக இரு‌ந்தது. 1980ம் ஆண்டு பேறு கால‌த்‌தி‌ன் போது ம‌ட்டு‌ம் 5,26,300 பெண்கள் மரணம் அடைந்தனர். இந்த எண்ணிக்கை 2008ம் ஆண்டு 3,42,900 ஆக குறைந்தது. இந்தியாவில் 1980ம் ஆண்டு ஒரு லட்சம் பிரசவங்களில் 408 முதல் 1,080 பெண்கள் மரணம் அடைந்தனர்.

இது 2008ம் ஆண்டில் 154 முதல் 395 வரையாக குறைந்தது. 2011-13 ஆண்டுகளில் இறப்பு விகிதம் என்பது, 1 லட்சம் பிறப்புகளுக்கு சுமார் 167 இறப்புகளாக உள்ளது. அதிகபட்ச இறப்புகளை பதிவு செய்வது அசாம் மாநிலம் என்றும் குறைந்தபட்சம் கேரளா என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பேர் மகப்பேறுக்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கால் உயிரிழக்கிறார்கள்.

குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்குள் சுமார் 500 மி.லி அல்லது 1000 மி.லி இரத்தம் இழப்பதே பெரும்பாலும் ஏற்படும் சிக்கல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1.2 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 12 மில்லியன் யூனிட் இரத்தம் தேவைப்படும் போது, வெறும் 9 மில்லியன் இரத்தம் மட்டுமே பெறப்படுகிறது. இதனால் இந்தியாவில் 25 சதவீதம் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இரத்த மேலாண்மை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம் என்றும் உலக சுகாதார அமைப்பு தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது போன்ற இறப்புகளை தடுக்க வேண்டுமானால், இரத்த தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும். இது குறித்த போதிய விழிப்புணர்வை அரசு எற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

tamil.oneindia.com

TAGS: