லண்டன்: இந்தியாவைவிட பாகிஸ்தானிடம் அணு ஆயதங்கள் அதிகமாக உள்ளன என்று ஸ்வீடனைச் சேர்ந்த சர்வதேச அமைதி ஆய்வு அமைப்பு கூறியுள்ளது.
“தங்கள் நாடு நினைத்தால் 5 நிமிடத்தில் இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதலை நடத்த முடியும்’ என்று பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ.க்யூ.கான் அண்மையில் தெரிவித்திருந்தார். அவரது பேச்சை வன்மையாகக் கண்டித்த இந்தியா, “அணு ஆயுதம் என்பது பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட வேண்டியது; அடுத்த நாடுகளை தாக்கப் பயன்படுத்த வேண்டியது அல்ல’ என்று கூறியிருந்தது.
இந்நிலையில், பல்வேறு நாடுகளில் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து ஸ்வீடனைச் சேர்ந்த சர்வதேச அமைதி ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தானிடம் 110 முதல் 130 அணு ஆயுதங்கள் வரை உள்ளன. அதே நேரத்தில் இந்தியாவிடம் 100 முதல் 120 அணு ஆயுதங்கள் வரை இருக்கலாம்.
அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகள் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றன. அதே நேரத்தில் சீனா அணு ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது.
இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை ஏவுகணைகள் மூலம் செலுத்தும் திறனை வளர்த்துக் கொண்டுள்ளன. வடகொரியாவும் தொடர்ந்து அணு ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய 9 நாடுகளிடம் மட்டும் 15,395 அணு ஆயுதங்கள் உள்ளன. கடந்த ஆண்டு இந்த நாடுகளிடம் மொத்தம் 15,850 அணு ஆயுதங்கள் இருந்தன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://www.dinamani.com