சொக்லேட் ராஜதந்திரம்: ஊடுருவலுக்கு பிறகு இந்திய ராணுவத்தை சமாதானப்படுத்திய சீன வீரர்கள்

india_china_map_20121022அருணாச்சல பிரதேசத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய- சீன ராணுவ வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.

இதன் காரணமாக எல்லை பகுதியில் அடிக்கடி சீன ராணுவத்தினர் ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்வதும், பின்னர் இந்திய ராணுவம் அதனை தடுப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

அதேபோன்று கடந்த 9ம் திகதி சீன ராணுவ வீரர்கள் 276 பேர் அருணாச்சல பிரதேசத்திற்குள் ஊடுருவியதாக ராணுவ தரப்பில் கூறப்பட்டது.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கிழக்கு காமெங் மாவட்டத்தில் யாங்சே என்ற இடத்தில் எல்லைப் பகுதியில் ஊடுருவிய அவர்கள் சில மணி நேரங்கள் அங்கேயே முகாமிட்டு பின்னர் தங்கள் பிராந்தியத்திற்கு திரும்பி விட்டதாக முதலில் தகவல் வெளியானது.

தற்போது இந்த சம்பவம் பற்றி புதிய தகவல்களை இந்திய ராணுவ வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை சீன ராணுவம் இந்திய எல்லையில் நுழைய முயன்ற போது, அதை இந்திய வீரர்கள் தடுத்துள்ளனர்.

அப்போது இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவ வீரர்கள் கைகளால் தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். இந்திய வீரர்களும் திருப்பி தாக்கியதை அடுத்து அவர்கள் திரும்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கைகலப்பு சம்பவத்தை தொடர்ந்து சீன ராணுவத்தை சேர்ந்த நான்கு அதிகாரிகள் ஒரு மொழிபெயர்ப்பாளருடன் இந்திய ராணுவ அதிகாரியை சந்தித்து, இரண்டு சாக்லேட் பாக்கெட்கள் மற்றும் ஒரு பரிசு பெட்டியை கொடுத்து சமாதானம் செய்துள்ளார்.

இதனையடுத்து அப்பகுதியில் நிலவி வந்த பதற்றம் முடிவுக்கு வந்ததாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீன ராணுவத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட சாக்லேட் ராஜதந்திரம் அரசியல் நோக்கர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

-http://news.lankasri.com

TAGS: