சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 12 ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட போதிலும், மேட்டூரில் உள்ள வீரப்பனின் சமாதிக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்தபடியேதான் இருக்கிறது.
இந்நிலையில்தான் வீரப்பன் கொல்லப்பட்டது தொடர்பான முக்கிய விஷயங்களை எழுதி புத்தகமாக கொண்டு வர உள்ளார் வீரப்பன் ஆப்ரேஷனை நடத்திய முன்னாள் அதிரடிப்படைத் தலைவரான விஜய்குமார் ஐ.பி.எஸ்.
தமிழக, கர்நாடகா வனப்பகுதிகளை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த வீரப்பனை, தருமபுரியில் வைத்து, கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி சுட்டுக் கொன்றது தமிழக அதிரடிப்படை.
வீரப்பன் கதையை முடிவுக்குக் கொண்டு வந்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் விஜய்குமார் ஐ.பி.எஸ். இவர் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தில் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார்.
வீரப்பன் தொடர்பாக, தினம்தோறும் டயரியில் எழுதி வைத்திருந்த தகவல்களை ஒன்றிணைத்து புத்தகம் எழுதத் தொடங்கியிருக்கிறார்.
தொடக்கத்தில், இரண்டாயிரம் பக்கங்களில் எழுதப்பட்டிருந்த குறிப்புகளை, ஆயிரம் பக்கங்களாக மாற்றியிருக்கிறார். அதையும், தற்போது 350 பக்கங்கள் கொண்ட புத்தக வடிவத்திற்கு மாற்றி எழுதியிருக்கிறார்.
இன்னும் மூன்று மாதங்களில் சந்தைக்கு வர இருக்கிறது அந்த புத்தகம். புத்தகத்தில் என்ன மாதிரியான விஷயங்கள் இடம்பெறப் போகிறது?’ என விஜய் குமார் ஐ.பி.எஸ்-க்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்.
அவர்கள் நம்மிடம், வீரப்பன் கதை தொடர்பாக எடுக்கப்பட்ட திரைப்படங்களில் ஐம்பது சதவீத உண்மை மட்டுமே இருக்கிறது. குப்பி’ படம் இயக்கிய ரமேஷ், ராம் கோபால் வர்மாவின் வீரப்பன் தொடர்பான படம் என அனைத்திலும், ‘ நாங்கள் அறிந்த வீரப்பனின் கதை’ என்றுதான் சொல்கிறார்கள்.
இன்னும் சொல்லப்படாத எவ்வளவோ உண்மைகள் இருக்கின்றன. அதைப் பற்றி எழுத வேண்டும் என விஜய்குமார் நினைக்கவில்லை. உறவினர்கள், நண்பர்களின் தொடர்ச்சியான வற்புறுத்தலில்தான் புத்தகம் எழுதத் தொடங்கியிருக்கிறார் என்றவர்கள், ” தன்னுடைய புத்தகத்தில் வீரப்பனை தகுதியான எதிரி என்றுதான் அவர் சொல்கிறார்.
ஒரு சிறிய கூட்டத்தை வைத்துக் கொண்டு மிகப் பெரிய நெகட்டிவ் வேலைகளை, மிகச் சாதாரணமாகச் செய்து முடிக்கும் திறமையுள்ளவனாக வீரப்பன் இருந்ததால், ‘தகுதியான எதிரி’ எனக் குறிப்பிடுகிறார்.
அதேபோல், வீரப்பனை அதிரடிப்படை வளையத்திற்குள் கொண்டு வரும் ‘ஆப்ரேஷன் குக்கூன்’ என்ற பெயர் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்தப் பெயர் வந்ததற்கும் சுவாரஸ்மான காரணம் இருக்கிறது.
கோவையில் உள்ள கார் இன்டீரியர் நிறுவனத்தில், வீரப்பனை ஏற்றி வரப் போகும் ஆம்புலன்ஸ் வாகனத்தை சீரமைக்கும் வேலைகள் நடந்து வந்தன. அந்த வாகனத்தைப் பற்றி விஜய்குமார் விசாரிக்கும்போதெல்லாம், ‘ குக்கூன் இப்போது எப்படி இருக்கிறது?’ என விசாரிப்பாராம்.
வாகனத்தை விசாரிப்பதற்காக வைக்கப்பட்ட பாஸ்வேர்டு, வீரப்பன் மரணத்தைத் தொடர்ந்து, ‘ ஆப்ரேஷன் குக்கூன்’ என்றே அழைக்கப்பட்டுவிட்டதாம். தேடுதல் வேட்டையின்போது கூடுதலாக துப்பாக்கிகள் வருவதாக இருந்தால், ‘ ஸ்வீட் பாக்ஸ் எப்போது வரும்’ என்றுதான் விசாரிப்பாராம்.
தவிர, அதிரடிப்படைக்கு வருவதற்கு முன்பே, வீரப்பன் தொடர்பாக தகவல்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வத்தோடு இருந்து வந்திருக்கிறார் விஜய் குமார்.
பிரதமர்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்புக் குழுவில் அவர் இருந்த காலத்தில் இருந்தே, வீரப்பன் பற்றிய செய்தி என்றால், அதைப் படித்துவிட்டுத்தான் மற்ற செய்திகளுக்குச் செல்வார். அந்தளவுக்கு வீரப்பன் பிம்பம் அவர் மனதில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது.
குறிப்பாக, அதிரடிப்படைக்கு தலைமை ஏற்கும் முன்பாக அவர் சொன்னது, ‘ வீரப்பனைப் பிடிப்பதற்காக அரசு என்னை நியமிக்கவில்லை. வீரப்பனின் ஆட்டத்திற்கு முடிவுகட்ட உருவாக்கப்பட்டதுதான் அதிரடிப்படை. அரசை எதிர்த்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையில் செயல்பட்ட ஒருவனை சந்திப்பதற்காகவே, விருப்பப்பட்டு அந்தப் பதவியை வாங்கினேன்’ என்கிறார்.
கூடவே, ‘ அதிரடிப்படை வளையத்திற்குள் வீரப்பனை விழ வைக்க என்ன மாதிரியான உத்திகள் கடைபிடிக்கப்பட்டன?’ என்பதையும் புத்தகத்தில் விளக்குகிறார். ‘ நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்த ஆம்புலன்ஸ் வண்டியில் வீரப்பன் ஏற முதன்மையான காரணம் கண் பாதிப்பு பிரச்னை.
இரண்டாவது, பிரபாகரனை சந்திக்க மிகவும் விரும்பினார் வீரப்பன். அதை நாங்கள் சாத்தியப்படுத்திக் கொடுப்போம் என எங்கள் உளவுத்துறை அவரை நம்ப வைத்தது.
பிரபாகரனும் வீரப்பனை சந்திக்க விரும்பினாரா என்பதற்கு புத்தகத்தில் விடை இருக்கும்’ எனச் சொல்லியிருக்கிறார் விஜய்குமார்.
ஏற்கெனவே இறந்துபோன வீரப்பனைத்தான் அதிரடிப்படை சுட்டுக் கொன்றதா என்ற சர்ச்சையைப் பற்றி அவர் சொல்லும்போது, ‘ ஆம்புலன்ஸ் வாகனத்தை நாங்கள் வளைத்ததும், சரணடையுமாறு வீரப்பனிடம் அறிவுறுத்தினோம்.
அவர்கள் கேட்காமல் எங்கள் மீது சுட ஆரம்பித்து விட்டனர். நாங்களும் சுட ஆரம்பித்தோம். என் துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் சீறிப் பாய்ந்தன. சுட்டு முடித்ததும், ஆம்புலன்ஸ் உள்ளே சென்று பார்த்தேன். வீரப்பன் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டிருந்தது. உடனே, மருத்துவமனைக்கு அவரை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினேன்.
அந்த உடலோடு படம் எடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. என்னைவிட, ஒன்றரை வயது பெரியவன் வீரப்பன். இந்த ஆப்ரேஷனில் நாங்கள் எதிர்கொண்ட சவால்கள், கிடைத்த அனுபவங்கள், சக அதிகாரிகளின் ஒத்துழைப்புகள், அரசின் ஆதரவு என அனைத்து விஷயங்களையும் விரிவாக எழுதப் போகிறேன்’ என விஜய்குமார் சொல்கிறார்” என்றனர்.
ஆங்கிலத்தைத் தொடர்ந்து தமிழில் வெளியாகப் போகும் விஜய்குமாரின் வீரப்பன் புத்தகம், இதுவரை வெளியான வீரப்பன் கதைகளில் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என்கின்றனர் அவரது நண்பர்கள்.
– Vikatan