5000 ஆண்டு பழமையான யோகாவை எத்தனை நாடுகள் ஆதரிக்கின்றன தெரியுமா?

yoga-600டெல்லி: இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு கடந்த 2014ம் ஆண்டு ஐ.நா. கூட்டத்தில் முதல்முறையாகக் கலந்து கொண்டு பேசினார். அப்போது, உடல்நலம், மனநலம் இரண்டையும் சிறப்பாக வைத்துக்கொள்ள உதவும் இந்தியாவின் தொன்மையான யோகாவுக்கென தனி தினம் அறிவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட ஐ.நா. சபை ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இதற்கு 177 நாடுகள் ஆதரவு அளித்தன. அதன்படி, கடந்தாண்டு ஜூன் 21-ம் தேதி முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

அதன்படி, டெல்லியில் நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார். முக்கிய பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குடியரசு தின விழாவுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு போல, யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கென தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

தியானம் மற்றும் யோகா என்பது உலகறிந்த மிகப்பழமையான மன, உடல் பயிற்சியாகும். சுமார் ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது யோகா. இது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, நம் உடலையும், மனதையும் ஒருங்கிணைக்கும் பாரம்பரியக் கலை.

உயிரினங்கள், பொருட்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு யோகா முத்திரைகளுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. யோகாவின் மூலமாக பல்வேறு நோய்களைக் குணமாக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய யோகாவை உலக மக்கள் அனைவரும் பெற்று பயனடைய வேண்டும் என்பதே, இந்த சர்வதேச யோகா தினத்தின் முக்கிய நோக்கமாகும். யோகா தினத்தை முன்னிட்டு பரவலாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: