அணுசக்தி நாடுகள் குழுவில் இந்தியாவைச் சேர்த்தால் பாகிஸ்தானையும் சேர்க்கணும்! – சீனா அடம்

india_china_002பெய்ஜிங்: அணுசக்தி வழங்கும் நாடுகள் குழுமத்தில் இந்தியாவைச் சேர்த்தால் பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டும் என சீனா அடம் பிடிக்கிறது. 48 நாடுகளை கொண்ட என்.எஸ்.ஜி. என்னும் அணுசக்தி வழங்கும் நாடுகள் குழுமத்தில் இந்தியா சேருவதற்கு விண்ணப்பித்துள்ளது.

இதே போன்று பாகிஸ்தானும், அந்த அமைப்பில் சேர விண்ணப்பித்திருக்கிறது. இந்தியாவுக்கு அமெரிக்கா முழு ஆதரவு தருகிறது. அத்துடன் பிற நாடுகளின் ஆதரவையும் கேட்டு வருகிறது. இந்த விஷயத்தில் என்.பி.டி. என்னும் அணு ஆயுதப் பரவல் தடை உடன்பாட்டில் கையெழுத்திடாத நாடு என்ற வகையில், இந்தியாவை என்.எஸ்.ஜி.யில் சேர்க்கக் கூடாது என்று கூறி சீனா போர்க்கொடி உயர்த்தி வருகிறது. அணு ஆயுதப் பரவல் தடை உடன்பாட்டில் கையெழுத்திட்டுவிட்டால் அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்ய முடியாது.

அத்துடன் சர்வதேச அணுசக்தி முகமை அதிகாரிகள், எந்த நேரமும் வந்து அணு உலைகளை சோதனையிட முடியும். பிரான்ஸ், இந்த உடன்பாட்டில் கையெழுத்திடாமல்தான் உறுப்பினராகச் சேர்ந்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டி, இந்தியாவும் தனக்கு அப்படி ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

என்.எஸ்.ஜி.யின் 5 நாள் பேரவை கூட்டம், தென்கொரியாவின் தலைநகரான சியோலில் நேற்று முன்தினம் தொடங்கியுள்ள நிலையில், சீன தலைநகர் பீஜிங்கில் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் என்.எஸ்.ஜி.யில் இந்தியா சேருவதற்கு ஆதரவு அளிக்குமாறு அணு வர்த்தக கிளப் நாடுகளிடம் அமெரிக்கா ஆதரவு கோரியுள்ளது பற்றிய கேள்விக்கு பதில் கூறுகையில், “இந்தியாவுக்கு ஆதரவு திரட்டும் அமெரிக்காவின் அறிக்கையை நான் பார்க்கவில்லை.

ஆனால் அணு ஆயுதப்பரவல் தடை உடன்பாட்டில் கையெழுத்திடாத எந்தவொரு நாட்டையும் என்.எஸ்.ஜி.யில் சேர்க்கக் கூடாது என்ற விதிமுறையை கொண்டு வந்த நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. என்.எஸ்.ஜி. அமைப்பின் முக்கிய குறிக்கோள், அணு ஆயுதப்பரவல் தடை தான். கதவு திறந்தே இருக்கிறது. ஒருபோதும் மூடவில்லை. நாங்கள் எந்த நாட்டுக்கும் எதிரானவர்கள் அல்ல. நாங்கள் விதிமுறைகளில் கவனம் செலுத்துகிறோம். அமெரிக்கா விதிமுறைகளை கொண்டு வந்திருக்கிறது. இந்த பிரச்சினை, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயானது அல்ல,” என்றார்.

இதற்கிடையே என்.எஸ்.ஜி.யில் இந்தியா சேரும் விவகாரம் குறித்து சீனாவின் அதிகாரப்பூர்வ நாளேடு ‘குளோபல் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள கட்டுரையில், “அணு ஆயுதப்பரவல் தடை உடன்பாடு மற்றும் என்.எஸ்.ஜி.யில் இந்தியாவுக்கு விலக்கு அளித்தால், அதை பாகிஸ்தானுக்கும் தர வேண்டும். என்.எஸ்.ஜி.யில் உறுப்பினராக சேருவதில் இந்தியாவும், பாகிஸ்தானும் கரம் கோர்த்தால் அது இன்னும் நடைமுறைக்கு ஏற்றதாக அமையும்,” என்று வலியுறுத்தியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: