சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கைது: 15 நாள் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவு

idols-seizedசென்னை: பழங்கால சிலைகள், ஓவியங்கள் திருடப்பட்ட வழக்கில் மூளையாக செயல்பட்ட ஆந்திர தொழிலதிபர் தீனதயாளனை போலீசார் இன்று கைது செய்தனர். சென்னை ஆழ்வார்பேட்டை, முரேஷ் கேட் சாலையில் ஒரு பங்களாவில் ஏராளமான சாமி சிலைகள் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், கடந்த சில நாட்களாக அந்த பங்களாவுக்குள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 400 க்கும் மேற்பட்ட பழங்கால சிலைகள், ஓவியங்களை கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரத்தில், மான்சிங், 58, குமார் 58, ராஜாமணி 60 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லும் ஏஜெண்டுகள் என்பது விசாரணையில் தெரியவந்தது. வீட்டின் உரிமையாளரும் கடத்தல் கும்பலின் தலைவருமான தீனதயாளன் (78), அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

தீனதயாளனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதனிடையே போலீசாரிடம் சரணடைந்த தீனதயாளனிடம் கடந்த 18 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து தீனதயாளனை சென்னை எழும்பூர் 2 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

பின்னர் தீனதயாளனை 15 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே சிலை கடத்தல் வழக்கில் சினிமா பிரபலங்களுக்கு தொடர்பிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்தாண்டு சிலை கடத்தல் விவகாரத்தில் பிரபல சினிமா இயக்குநர் சேகர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தீனதயாளன் கைது செய்யப்பட்டிருப்பதால் இதில் தொடர்புடைய சில சினிமா பிரபலங்கள் குறித்த தகவல்களும் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

tamil.oneindia.com

TAGS: