சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி நாட்டின் மிகப் பெரிய தமிழ்ப்பள்ளி. 106 ஆசிரியர்களைக் கொண்ட இப்பள்ளியில் 2,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. அடுத்த ஆண்டு முதலாம் வகுப்பில் சேருவதற்கு இதுவரையில் 400 க்கு மேற்பட்ட சிறுவர்கள் பதிந்து கொண்டுள்ளனர்.
மாணவர்கள் வசதியாக கல்வி கற்பதற்கு போதுமான இடவசதியற்ற தமிழ்ப்பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும்.
இப்பிரச்னைக்கு வழிகாணும் பொருட்டு சிலாங்கூர் மாநில அரசு 2009 ஆம் ஆண்டில் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி II ஐ அமைப்பதற்கு அருகிலுள்ள தாமான் செந்தோசாவில் 2.72 ஏக்கர் நிலத்தை வழங்கியது. அதில் பள்ளிக்கான கட்டடத்தைக் கட்டுவதற்கான ஏகபோக உரிமையைக் கொண்டிருப்பது பெடரல் அரசாங்கமாகும். அதன் அனுமதியின்றி ஒரு கல்லைக்கூட அந்நிலத்தில் கட்டடம் கட்டுவதற்காக வைக்கக்கூடாது. ஆனால், இன்று வரையில் அந்த நிலத்தில் காணப்படுவது புல்லும் புதர்களும்தான்.
என்ன ஆச்சு
கடந்த ஜூன் 27 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் “சட்டம் தெரியாத” சட்ட அமைச்சர் நஸ்ரியின் தலைமையில் நடந்த ஒரு வட்டமேசை சந்திப்பில் பங்கேற்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்ப்பள்ளிகளை வாழ வைப்பதற்கான இதர நடவடிக்கைகள் குறித்து விவாதம் நடத்தி ஒரு முடிவிற்கு வந்து அதன் பின்னர் செயல்படுவதற்கான வழிமுறைகளைக் காண பல கூட்டங்களை நடத்துவதற்கு முன்னர் இந்நாட்டில் மாணவர்களுக்கு கடும் இடம் பற்றாக்குறையை ஆண்டாண்டாக அனுபவித்து வரும் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி II ஐ முதலில் கட்டுவதற்கான உரிமத்தைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிமத்தைப் பெற வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றினர். என்ன ஆச்சு? சம்பந்தப்பட்ட ஒருவர் “கோவிந்தா ஆச்சு” என்று கூறினார்.
தமிழ்ப்பள்ளிகள் உயர்ந்து விண்ணை முட்டி முழு உதவி பெறும் அரசாங்கப்பள்ளிகளாக மாறுவதற்குத் தடையாக இருப்பது தமிழ்ப்பள்ளிகள் கட்டுவதற்கு தேவைப்படும் நிலம்தான் என்று இந்நாட்டின் காட்டை தங்களுடைய வெறும் கையைக்கொண்டே அழித்து நாடாக்கியவர்களை பிரதிநிதிக்கும் ஓர் அரசியல் அமைப்பின் தலைவராக இருந்த ச.சாமிவேலு மலாயா பல்கலைக்கழகத்தில் 1992 ஆம் நடந்த கருத்தரங்கில் கூறினார்.
“அவர்கள் வாங்கிக்கொள்ள முடியாதா”?
பூனைகளுக்கெல்லாம் நிலம் கொடுக்கப்படுகிறது இந்நாட்டில். ஆனால், தமிழ்ப்பள்ளிக்கான நிலத்தை “அவர்கள்” (இந்தியர்கள்) வாங்கிக்கொள்ள முடியாதா என்று சமீபத்தில்தான் தாம் முதலில் மலாய்க்காரர் அடுத்துதான் மலேசியர் என்று பகிரங்கமாக அறிவித்த மலேசியாவின் கல்வி அமைச்சர் முகைதின் யாசின் கூறினார்.
காட்டை அழித்தவர்களின் கையில் தங்களையும் அழிக்கக்கூடிய வாக்குச் சீட்டுகள் இருக்கின்றன என்பதையாவது உணர்ந்து கொண்ட சிலாங்கூர் மாநில அரசு சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி II க்கு தேவைப்படும் நிலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கியது. கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கை எதுவும் இதுவரையில் கல்வி அமைச்சால் எடுக்கப்படாததால் எரிச்சலடைந்த சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி II ஐ கட்ட முடியாது என்று மத்திய அரசு பகிரங்கமாக அறிவித்தால், மக்களின் உதவியோடு நாங்கள் அப்பள்ளியைக் கட்டுவோம்”, என்றும் அறிவித்தார். அவர் விட்ட சவாலுக்கும் இதுவரையில் பதில் இல்லை.
காடுவெட்டிகள்
ஆனால், தற்போது இந்நாட்டு இந்தியர்களை இமயமலையின் உச்சியில் ஏற்றி விடுவதற்காக பிரதமர்துறையில் குடியேறிக்கும் இந்தியர்களில் ஒருவரான என்.சிவசுப்ரமணியம் புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டுவதற்கு உரிமம் தேவையில்லை என்று கூறியுள்ளார். ஆனால், இந்த அறிவிப்பை கல்வி அமைச்சர் செய்யவில்லையே. ஏன்?
காட்டை அழித்தவன் கையில் வாக்குச் சீட்டு இருக்கிறதே. பிரதமர்துறையின் பிடிஎன் (குடியியல் பயிற்சி பிரிவு) நடத்தும் பயிற்சியில் போதிப்பவர்களுக்கும் பயிற்சி பெற்றவர்களுக்கும் (தெலுக் பங்கிளிமா ஆசிரியை ரோஷித்தா போன்றவர்கள்) அவன் வந்தேறிதான்; நாய்க்குப் பிறந்தவந்தான்; குடிகாரன்தான்; கூட்டிக்கொடுப்பவன்தான்; பறையன்தான்; தன்னுடைய மனைவியின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாதவன்தான். ஆனால், அவனின் வாக்குச் சீட்டு முழுவதும் கிடைக்காவிட்டால், புத்ராஜெயா என்ன ஆகும்?
பார்க்கலாம். பத்துமலையில் ஏறி இறங்குவதைத் தவிர வேறொன்றும் தெரியாத இந்தக் காடுவெட்டிகளைச் சமாளித்து விடலாம். உதவிக்குப் போதுமான காடுவெட்டிக் கூட்டத்தினர் இருக்கின்றனர். “தண்ணி” கொடுக்க முடியாது. ரொக்கமாக, அன்பளிப்புப் பொட்டலமாக, தோசையாக, கறி வகைகளாகக் கொடுத்து அந்தப் பொன்னான வாக்குச் சீட்டுகளை வாங்கி விடலாம். அந்தக் காடுவெட்டி கூட்டத்தினரின் தலைவர்கள்கூட தங்களின் படம் பொரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் அரிசி பொட்டலங்களைத் தருகின்றனரே. நாமும் செய்யலாம் என்று காடுவெட்டிகளை நோக்கி இறங்கி விட்டார் இன்னொரு வந்தேறியான பிரதமர் நஜிப்.
வரம் கிடைக்குமா?
சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் கைப்பற்ற வேண்டும். அம்னோ ஆட்சி அங்கு மீண்டும் மலர வேண்டும். அது நஜிப்பின் உரிமை. இவர் ஏறுவதற்கு இந்தியர்கள்தான் ஏணிப்படியாக இருக்க வேண்டுமா?
சிலாங்கூரில் கோத்தா ராஜா தொகுதியைக் கைப்பற்ற வேண்டும். தீபாவளிக்கு இரண்டு நாள் பொது விடுமுறை அளிக்க முன்வராத, பள்ளி மாணவர்களுக்கு முறையான தீபாவளி விடுமுறை அளிக்க முன்வராத, அம்னோ அரசாங்கத்தின் பிரதமர் நஜிப் தீபாவளி முடிந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு கோத்தா ராஜாவுக்கு நவம்பர் 10 ஆம் தேதி தீபாவளி கொண்டாடச் செல்கிறார்.
கோத்தா ராஜா தொகுதிக்குச் செல்லும் பிரதமர் நஜிப் அங்குள்ள எஸ்கே கம்போங் ஜாவா பள்ளிக்குச் செல்கிறார். அங்கிருந்தாவது சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி II க்கான கட்டடம் கட்டப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் நிலத்தை எட்டிப் பார்த்து தீபாவளி வரம் கொடுப்பாரா என்று சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர் கன்னத்தில் கையை வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பிரதமர் நஜிப் ஏன் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளிக்கு சென்று தரிசனம் அளிக்கவில்லை? 106 ஆசிரியர்கள் என்றால் காடுவெட்டி பரம்பரையினரின் 106 வாக்குச் சீட்டுகள்! 2,000 மேற்பட்ட மாணவர்களின் காடுவெட்டி பரம்பரையினரின் பெற்றோர்கள்; அவர்களின் உற்றார் உறவினர்கள். ஏன்? ஏதோ விசயம் இருக்கிறது.
சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளிக்கு வருகை அளிப்பதென்றால், பிரதமர் நஜிப் அப்பள்ளிக்கு ஒரு நான்கு மாடி கட்டடம் கட்டுவதற்கும் பள்ளியின் இதர மேம்பாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முன்வர வேண்டும் என்ற நிபந்தனை வலம் வருவதாக கூறப்படுகிறது.
சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளிக்கு அவர் நேராக வருகையளித்து தரிசனம் அளிக்க விட்டாலும், எஸ்கே கம்போங் ஜாவா பள்ளியிலிருந்து வரம் அளிப்பார் என்ற “நம்பிக்கை”யுடன் காத்திருக்கின்றனர் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர்.
நம்பி நாசாமாகலாமா?
நம்புங்கள். ஆனால், நாசமாக்கப்பட்டோம் என்று அறிவித்த பின்னரும் நம்புவோம் என்றால், நாம் நாசமாக்கப்பட வேண்டியவர்கள்தான்.
டிசம்பர் 23, 2010 இல் மஇகாவின் புத்தம் புதிய தலைவர் ஜி.பழனிவேல் “நாம் ஓரங்கட்டப்பட்ட சமூகம். அதில் சந்தேகமே இல்லை”, என்று கூறினார். எதிர்க்கட்சியினர் துணை முதல்வர் பதவியும் சட்டமன்ற தலைவர் பதவியும் அளித்திருப்பதை மறுப்பதற்கில்லை என்றும் அவர் கூறினார்.
காடுவெட்டிய இந்தியர்களை ஐம்பது ஆண்டுகளாக ஓரங்கட்டியது யார்? அம்னோ அரசாங்கம். அதன் தலைவரான நஜிப், என்னை நம்புங்கள் என்கிறார். நம்ப வைக்க தீபாவளி விருந்தளிக்கிறார். ஆனால், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி II க்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்ட 2.72 ஏக்கர் நிலம் இன்றும் ஓரங்கட்டப்பட்டுள்ளேதே. நம்பலாமா?