டெல்லி: ஜாகீர் நாயக்கின் போதனைகளை ஒளிபரப்பும் ‘பீஸ் டிவி’ சட்டவிரோதமாக செயல்படுகிறது என்றும் இவ்விவகாரத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சட்ட ஆலோசனையை நாடுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவரின் போதனைகளை ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஓட்டலில் கடந்த 1-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தார்.
இதனால் அவர் ஜாகீர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகீர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது. சமூகவலைதளத்தில் தாங்கள் மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சால் ஈர்க்கப்பட்டதாக தீவிரவாதிகள் கூறியிருந்தனர்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் ஜாகீர் நாயக்கிற்கு இங்கிலாந்து, கனடாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலேசியாவில் தடை விதிக்கப்பட்ட 16 இஸ்லாமிய அறிஞர்களில் நாயக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது மத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மெக்கா சென்றுள்ளார். 11-ந்தேதி மும்பை திரும்புவார் என கூறப்படுகிறது.
ஜாகீர் நாயக்கின் போதனைகளை சர்வதேச இஸ்லாமிய சேனலான பீஸ் டிவி ஒளிபரப்பு செய்து வருகிறது. அதில் அவர் “அனைத்து இஸ்லாமியர்களும் பயங்கரவாதிகளாக மாறவேண்டும்,” என்று வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுக்கள் விசாரித்து வருகிறது.
இதுகுறித்து, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஆர் எஸ் ராவுத்தர் கூறுகையில், கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் ‘லைசன்ஸ்’ இல்லாத டிவிகளை ஒளிபரப்பு செய்து இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். பீஸ் டிவியில் ஒளிபரப்பு ஆன தகவல்களையும் அமைச்சகம் கருத்தில் கொண்டு உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். ஜாகீர் நாயக்கின் பேச்சுகளை உள்துறை மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் ஜாகீர் நாயக்கின் போதனைகளை ஒளிபரப்பும் ‘பீஸ் டிவி’ சட்டவிரோதமாக ஒளிபரப்பாகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ‘பீஸ் டிவி’ இந்தியாவில் ஒளிபரப்பு செய்ய உரிமம் பெறவில்லை என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. உரிமம் பெறாத நிலையில் அந்த டிவியை கேபிள் ஆப்ரேட்டர்களால் ஒளிபரப்பு செய்யப்பட்டு உள்ளது. ‘பீஸ் டிவி கடந்த 2008-09 ஆண்டுகளில் உரிமத்திற்காக விண்ணப்பித்து உள்ளது. ஆனால் உரிமம் வழங்க மறுக்கப்பட்டு விட்டது.
இதற்கிடையே சில கேபிள் ஆப்ரேட்டர்களால் இதுவரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு உள்ளது, இவ்விவகாரத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சட்ட ஆலோசனை நாடுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனிடையே ஜாகீர் நாயக்கின் பேச்சுக்கள் அடங்கிய சிடிக்கள் ஆராயப்பட்டு வருகிறது. மேலும் அவரின் போதனைகளை ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
-http://tamil.oneindia.com
நமது நாட்டில் உள்துறை அமைச்சால் தடைவிதிக்கப்பட்ட ஒரு மனிதர். ஆனாலும் அவர் வந்து போகிறார்! சமயத்தின் பெயரால் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்! சட்டவிரோத ஒளிபரப்பில் பங்கு பெறுகிறார்!. அவர் நல்லவர், வல்லவர் என்று பெயர் வேறு!